×

குறிப்பிட்ட நிறுவனத்தின் ஸ்டிக்கர் அவசியம் தகுதிச்சான்று புதுப்பிக்க அரசு புதிய கெடுபிடி: லாரி உரிமையாளர்கள் அதிருப்தி

நாமக்கல்: லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்க, அரசு அங்கீகரித்த நிறுவனத்தின் ஒளிரும் ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்ட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காததால், லாரி தொழில் கடந்த 4 மாதமாக முடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், சுமார் 4 லட்சம் சரக்கு லாரிகள் உள்ளன. இதில் தற்போது 30 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதே, மத்திய அரசு டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தியது. லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை, மாநில அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், லாரி உரிமையாளர்களுக்கு, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு தற்போது ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்டிஓ ஆபீசில் லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கும் போது, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் ஒளிரும் (ரிப்ளக்டர்) ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும். பழைய ஸ்டிக்கரோ அல்லது பிற நிறுவன ஸ்டிக்கரோ ஒட்டியிருந்தால், அந்த வாகனங்களுக்கு தகுதிசான்று பெற முடியாது என அறிவித்துள்ளது. இது லாரி உரிமையாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெள்ளை, சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகிய கலர்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. தற்போது தமிழக அரசு, பெங்களூருவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஸ்டிக்கரை மட்டும், லாரியின் 3 பகுதியிலும் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்தின் மூலம் பெற்று ஆன்லைனில் லாரி உரிமையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே, எப்சி பெற முடியும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, கடந்த வாரம் நேரில் சந்தித்து முறையிட்டனர். இதற்கு அமைச்சர், தற்காலிகமாக வரும் 19ம் தேதி வரை பழைய முறைப்படி எப்சி பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இதனால் கடந்த இரு நாட்களாக ஆர்டிஓ ஆபீசில் லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பித்து கொடுக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து துறை ஆணையரின் அனுமதி பெற்ற வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி இருந்தால் தான், தகுதிச்சான்று புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் சில நாட்கள் அவகாசம் அளித்த அமைச்சர், பின்னர் புதிய வேககட்டுப்பாட்டு கருவியை பொருத்தினால் மட்டுமே எப்சி பெற முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தற்போது அதே பானியில் புதிய ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறுகையில், ‘அதிக செலவு செய்து ஸ்டிக்கர் ஒட்டுவது, ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்களையும் பாதிக்கும். ஊரடங்கு உத்தரவால் தொழில் பாதிப்பு அதிகம் இருக்கும் போது, அதை உணராமல் தமிழக அரசு லாரி உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இது பற்றி வரும் 20ம் தேதி, சம்மேளன செயற்குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Truck owners ,Government ,company , Specific company, sticker requirement, certification, government, new nuisance, truck owners, dissatisfaction
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்