×

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் செமி பைனலில் லியோன்: மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய மான்செஸ்டர் தோல்வி அடைய, சுமாராக விளையாடிய லியோன் அணி 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த கடைசி காலிறுதியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி - பிரான்சின் ஒலிம்பிக்யூ லியோன் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே களத்தில் அசத்தலாக விளையாடியது மான்செஸ்டர் சிட்டி அணி. ஆட்டம் முழுவதும் 72 சதவீத நேரம் பந்து மான்செஸ்டரிடம் இருந்தது. அதுமட்டுமல்ல பந்தை துல்லியமாகக் கடத்துவதிலும் மான்செஸ்டர் தான் முன்னிலை.

எதிரணியின் கோல் பகுதியில் அதிக நேரம் முற்றுகையிட்டு, இலக்கை நோக்கி பந்தை அடித்ததும் மான் செஸ்டர்தான். இப்படி குறைசொல்ல முடியாத ஆட்டம் ஆடியும் பலனில்லை. விறுவிறுப்பான இப்போட்டியில் லியோன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது ஆச்சரியம் தான். லியோன் சார்பில் மாக்ஸ்வெல் கார்னெட் (24வது நிமிடம்), மவுஸ்ஸா டெம்பெலே (79வது, 87வது நிமிடம்) அபாரமாக கோல் போட்டனர். மான்செஸ்டர் சிட்டி வீரர் கெவின் டி புருய்னே  (69வது நிமிடம்) ஆறுதல் கோல் அடித்தார். 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள லியோன் அணி, பேயர்ன் மியூனிக் சவாலை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதியில் ஆர்பி லெய்ப்ஜிக் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதுகின்றன.

Tags : semi-final ,Manchester City ,UEFA Champions League ,Lyon , UEFA Champions League, semi-final, Lyon, Manchester City
× RELATED சில்லிபாயின்ட்..