×

உடன்குடியில் சேதமடைந்த தியாகிகள் இல்லம்; உடைக்கப்பட்ட கல்வெட்டுகளால் மறைக்கப்படும் வரலாறு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

உடன்குடி: சுதந்திர போராட்டத்தில் 1942ம் ஆண்டு ஆக. 8ல் காந்தி மும்பையில் மாநாடு நடத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. ஆக. 9ம்தேதி ஏராளமான தலைவர்களை கைது செய்தது ஆங்கிலேய அரசு. ஆக.11ல் உடன்குடி வெள்ளாளன்விளை தேரியில் ரகசிய கூட்டம் படுக்கபத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் தலைமையில் நடந்தது. அதில் ராஜகோபால், காசிராஜன், பெஞ்சமின், பூவலிங்கம், செல்லதுரை, தர்மகோயில்பிள்ளை, பொன்னையா, நாராயணபிள்ளை, ரத்தினசாமி(எ) பெருமாள், மகாராஜா, தேவயிரக்கம், கனி, தங்கையா, ஆறுமுகம், நெல்லையப்பன், மோட்டார்(எ)ரத்தினசாமி, காசி, துரை, மந்திரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் ஆலந்தழை வரையுள்ள தந்தி கம்பங்கள் இரவோடு இரவாக அடித்து உடைத்து பின்னர் தலைமறைவாகினர். செப்16ம்தேதி தாங்கையூர் பகுதியில் படுக்கபத்தைச் சேர்ந்த மங்களாபொன்னம்பலம் என்பவர் தலைமையில் கூட்டம் போட்டு அரசுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு மெஞ்ஞானபுரம் தபால் நிலையம், சாத்தான்குளம் காவல்நிலையத்தை உடைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து தபால்அலுவலகத்தை உடைத்து தீயிட்டு கொளுத்தி ஏற்பட்ட பிரச்னையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பத்திரமாக வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தாக்குவது குறித்து தகவல் முன்கூட்டியே தெரியவந்ததும் காவல்நிலையத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த முயற்சி பலனளிக்கவில்லை. மேலும் செப் 17ம்தேதி மேலப்புதுக்குடி சொனைப்பகுதியில் உடன்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ரகசிய கூட்டம் போட்டு குலசேகரன்பட்டினம் உப்பளத்தில் ஆங்கிலேயர்களால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் 12க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கொள்ளையடித்து போராட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும் என கருதினர். உப்பள அதிகாரியாக வடக்கு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த வில்பிரட்லோன்துரை என்பவர் வேலை பார்த்து வந்தார்.

குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு செல்லும் சாலையில் அவர் தங்குவதற்கு பங்களா அமைத்திருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த சுதந்திர போராட்ட வீரர்கள் காவலாளியை கட்டிப்போட்டு குடிசைக்கு தீவைத்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுக்க முயற்சி செய்தனர். இந்த தகவல் கிடைத்து உப்பள அதிகாரியான வில்பிரட் லோன் துரை சம்பவ இடம் விரைந்ததும் போராட்ட வீரர்கள் அவரை அரிவாள், வேல்கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் சுமார் 15 இடங்களுக்கு மேல் வெட்டு, குத்து ஏற்பட்டு அங்கேயே பலியானார். இதனையடுத்து திருநெல்வேலி டிஎஸ்பி ராவ்பகதூர் அப்பாத்துரை தலைமையில் பெரிய போலீஸ் படை கொண்டு வரப்பட்டு உடன்குடி பகுதியில் எந்த வீடுகளிலும் ஆண்கள் யாரும் இல்லாமல் போலீசார் அழைத்துச் சென்றனர்.

மேலும் பல்வேறு கட்டங்களாக நடந்த சுதந்திரப்போராட்டத்தின் காரணமாக ராஜகோபால், காசிராஜனுக்கு தூக்குதண்டனை விதிக்கபபட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. விடுதலைக்காக போராடியவர்களுக்காக உடன்குடி யூனியன் அலுவலகத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டு பின்னர் வைக்கப்படவில்லை. மேலும் குலசேகரன்பட்டினத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்ட நினைவு பகுதியில் கல்வெட்டுகள் உடைக்கப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது.

மேலும் உப்பள அதிகாரி தங்கியிருந்த பங்களா சிதிலமடைந்து விட்ட நிலையிலும் நுழைவு வாயில் தூண் இன்றளவும் உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட வில்பிரட்லோன்துரை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. சுதந்திரபோராட்டத்திற்காக ஈடுபட்டவர்களை நினைவு கூறும் வகையில் உடன்குடியில் நினைவு தூண்களோ, நினைவு இல்லங்களோ அமைக்கப்படவில்லை. இனியாவது சுதந்திர போராட்டத்தில் உடன்குடி பகுதியிலிருந்து ஈடுபட்டவர்களின் உண்மை நிலைகளை அரசு வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே உடன்குடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தியாகி பூவலிங்கத்தின் உறவினர் குணசீலன் கூறுகையில், ``சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் பட்ட இன்னல்களை சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் பொருட்டு உடன்குடி பகுதியில் நினைவுதூண், நினைவு இல்லம் என எதுவும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வருங்கால சந்ததியினருக்கு உடன்குடி தியாகிகளின் வரலாறு தெரியாமல் மறைக்கப்படும் சூழல் உள்ளது. எனவே அரசு பள்ளிப்பாடப்புத்தகத்தில் சுதந்திரத்திற்காக உடன்குடி பகுதி தியாகிகள் பட்ட இன்னல்களை, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

Tags : neighborhood ,district administration ,Martyrs Home , Udangudi, home of damaged martyrs, hidden history
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...