×

புகையிலை பொருட்களின் கடத்தல் `மையமாக’ மாறி வரும் தூத்துக்குடி! பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி: புகையிலை பொருட்களின் கடத்தல் மையமாக தூத்துக்குடி மாறி வருகிறதோ என சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு பகலாக கண்காணித்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 13ம் தேதி ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் போலீசார் சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் போலீசில் பிடிபட்ட தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பிருதிவிராஜிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரிலிருந்து மிகப் பெரிய ெநட்வொர்க் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது குறிஞ்சி நகரில் சவுந்திரபாண்டியன் மகன் மகாராஜன் (36) என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த கார், 2 ஆம்னி வேன்கள், மினி லாரி ஆகிய வாகனங்களின் மூலம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 958 பாக்கெட் புகையிலை பொருட்கள் கொண்டு செல்ல இருந்தது, தெரியவந்தது. இந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, மகாராஜன், அதே பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.17.18 லட்சம் ஆகும். இதுபோல் கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து கோவில்பட்டிக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் நேற்று முன்தினம் விளாத்திகுளத்தில் பிடிபட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் (30), மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மஞ்சுநாதா (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 2 சம்பவங்கள் தவிர காயல்பட்டினம் கடற்கரையிலும் அடிக்கடி புகையிலை பொருட்கள் இலங்கையிலிருந்து கடத்தப்படுவதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் தூத்துக்குடி மாவட்டம், புகையிலை பொருட்களின் கடத்தல் மையமாக திகழ்கிறதா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள பெட்டிக் கடைகள் மூலம் மாணவர்களுக்கு விற்கப்பட்டன.

தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மெயின் ரோடுகளில் உள்ள சில பெட்டிக் கடைகள் மற்றும் சில டீக்கடைகள் மூலம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் இல்லாமல் தவிக்கும் சில டீ மற்றும் சில பெட்டிக் கடை வியாபாரிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை ஈடுகட்டவும், புகையிலை பொருட்கள் விற்பனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடல் வழியாக தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் வந்திறங்குவதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே காயல்பட்டினத்தில் இலங்கையிலிருந்து நாட்டுப்படகுகள் மூலம் போதைப் பொருட்கள் வந்திறங்குவதாக கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கரும் குற்றம்சாட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுப்படுத்த எஸ்.பி. ஜெயக்குமார் தனிப்பிரிவை ஏற்படுத்தினாலும், வருவாய்த்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் தான், தூத்துக்குடியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Thoothukudi , Tobacco smuggling, Thoothukudi
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது