×

சின்னாறு வனத்தில் சூழல் சுற்றுலா நிறுத்தம்: வாழ்வாதாரம் இழந்த மக்கள்

உடுமலை: சின்னாறு வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டம் நிறுத்தப்பட்டதால் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்தில் சின்னாறு வனப்பகுதி சிறந்த சூழல் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பான நடை பயணம், ஆற்றின் கரையோரம் நடைபயணம் மேற்கொள்ளவும், பரிசல் சவாரி செய்து மகிழ்ந்திட இயற்கையாக அமைந்த சின்னாறும் திருப்பூர் மாவட்டத்தில் சூழல் சுற்றுலாவிற்கு ஏற்றவை. இப்பகுதியில் உள்ள தளிஞ்சி மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.

குறைந்த கட்டணத்தில் நாள் முழுவதும் வனப்பகுதி ஆற்றின் கரையோரப் பகுதி பரிசல் பயணம், சிற்றுண்டி,  மதிய உணவு உள்ளிட்ட மனதை மயக்கும் வண்ணம் சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இயற்கை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் ஆன்லைன் மூலம் சூழல் சுற்றுலா திட்டத்தில் புக் செய்து வனப்பகுதியின் இயற்கையை மகிழ்வுடன் கண்டு ரசித்து வந்தனர். இதற்காக மலைக் கிராம மக்களுக்காக பத்துக்கும் மேற்பட்ட பரிசில்களை வாங்கி  அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்து கொடுத்தனர்.

இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் சுற்றுலாத் திட்டம் செயல் இழந்து இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாத் திட்டம் மலைவாழ் மக்களுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில் கொரோனா பரவல் ஊரடங்கால் சூழல் சுற்றுலாவை நம்பியிருந்த மலைவாழ் மக்கள் கடந்த 5 மாதமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சின்ன ஆற்றில் பயணம் மேற்கொள்வதற்காக வாங்கப்பட்ட பரிசல்கள் மழைக்கு நனைந்தும் வெயிலுக்கு காய்ந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பருவமழை துவங்கி விட்டதால் தேனெடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற பணிகள் இல்லாமல் மலைகிராம மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். கொரனோ ஊரடங்கு காரணமாக மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் தானிய வகைகளை உடுமலை  மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் ஏதாவது நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கவனிப்பாரற்று கிடக்கின்ற பரிசில்களை வனத்துறையினர் பாதுகாப்பான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Chinnaru Forest ,Eco Tourist Park , Chinnaru, Eco Tourist Park, Livelihood
× RELATED லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை