×

குளத்தூர் அருகே வடக்கு கல்மேட்டில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கும் தடுப்பணை: வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் சீரமைக்கப்படுமா?

குளத்தூர்: குளத்தூர் அருகே ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு கல்மேடு கிராமத்தின் கல்லாற்று பகுதியில் உள்ளது சண்முககுளம் தடுப்பணை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு துரைச்சாமிபுரம் கண்மாய், தெற்கு கல்மேடு கண்மாய் பகுதிகளை இணைத்து இந்த தடுப்பணை கட்டப்பட்டது. எப்போதும்வென்றான் கண்மாயில் இருந்து ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, முள்ளூர் நீர்வழி ஓடை வழியாக வரும் தண்ணீரை தடுப்பணையில் சேமித்து அப்பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்லும் விதமாக ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் இது கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் நெல், பருத்தி போன்ற பயிர்களை விதைத்து முப்போக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து பருவமழை குறைந்து போனதால் விவசாயமும் குறைந்தது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையும் பராமரிப்பின்றி ஆங்காங்கே ஓட்டைகள் விழுந்தன. சில இடங்களில் தடுப்பு சுவர் சரிந்தன. ஷட்டர் பகுதியும் சிதிலமடைந்து உடைந்து காணப்படுகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் தேங்குவது கானல்நீர்போல் ஆனது. இந்த தடுப்பணை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களும் அளித்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு என்ற பெயரில் அணையில் உள்ள விரிசல்களை ஏனோ தானோ என பூசிச் சென்றனர்.

மடைகளை முழுவதுமாக சீரமைக்காமல் அரைகுறையாக பழுது பார்த்ததுடன் மடையில் உள்ள ஷட்டரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கடந்தாண்டு பெய்த கனமழையில் தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் வீணாக கடலுக்கு சென்றதுடன் ஷட்டர் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் அணை சுவர் இடிந்தும் விழுந்தது. தகவலறிந்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டும் இதுவரை தடுப்பணையில் ஷட்டரை சீரமைக்கவோ, உடைந்த பகுதியை புதிதாக கட்டவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், வடக்குகல்மேடு தடுப்பணையை முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையை ஒட்டிய கண்மாய்க்கு வரும் தண்ணீரை கொண்டு வடக்குகல்மேடு, துரைச்சாமிபுரம், பட்டினமருதூர், வேப்பலோடை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் இரு போகம் நெல், பருத்தி பயிரிட்டோம். ஆனால் தற்போது தடுப்பணை சிதிலமடைந்து கிடக்கிறது. கண்மாய்கள், குளங்கள், மடைகளும் சீரமைக்கப்படாததால் தண்ணீர் தேங்குவதும் குறைந்து விவசாயமும் குறைந்துபோனது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பாராமுகமாக உள்ளனர். கடந்தாண்டு அணை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் வரும் பருவமழையின்போது தண்ணீர் தேங்குவது சந்தேகமே.

இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. தூர்வாரப்படாததால் தடுப்பணை மற்றும் கண்மாய் பகுதிகளை சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளன. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உயரதிகாரிகள் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு துரிதகதியில் சீரமைப்பு மற்றும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : dam ,Kulathur ,North Kalmet , Kulathur, dilapidated dam, northeast monsoon
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்