×

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட திருவிதாங்கூர் சமஸ்தானம் கண்ட 19 நகராட்சிகளுக்கு இன்று வயது 100

நாகர்கோவில்: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நாகர்கோவில் உட்பட 19 நகரங்கள் நகராட்சிகளாக மாற்றப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. குமரி மாவட்டத்தின் தற்போதைய அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களில் உள்ளடங்கிய நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் ஆகிய நகராட்சிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தவை ஆகும். 1956ம் ஆண்டு 4 தாலுகாக்களும் தாய் தமிழகத்துடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.

இதில் முன்னதாக  2வது ஒழுங்குமுறை,  மூன்றாம் ஒழுங்கு முறை ஆகியவற்றின் அடிப்படையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்து வந்த 19 நகரங்கள் ‘பட்டணங்கள்’ என்று அறிவிக்கப்பட்டன. அதன் கீழ் பட்டண மேம்பாட்டு குழுக்கள் (டவுன் இம்ப்ரூவ்மென்ட் கமிட்டி) அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி குளச்சல், பத்மநாபபுரம் 1912 ம் ஆண்டுகளிலும், குழித்துறை 1913ம் ஆண்டிலும் டவுன் இம்ப்ரூவ் கமிட்டியாக மாறியவை ஆகும். அவை நகரங்களை நிர்வாகம் செய்து வந்தன. தொடர்ந்து 5 வது ஒழுங்குமுறையான ‘திருவிதாங்கூர் முனிசிபல் ரெகுலேஷன்’ அடிப்படையில்  1920ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்து வந்த 19 நகரங்கள் ‘முனிசிபாலிட்டிகள்’ என்று அறிவிக்கப்பட்டது.

முனிசிபாலிட்டிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் முனிசிபல் கவுன்சில் அமலுக்கு வந்தது. 1920 ஆகஸ்ட் 16 அன்று உதயமான திருவனந்தபுரம், நாகர்கோவில், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், ஆலுவா, காயங்குளம், திருவல்லா, வைக்கம், குளச்சல், பத்மநாபபுரம், செங்கோட்டை, சங்கனாச்சேரி, குழித்துறை, நெய்யாற்றின்கரை, ஆற்றிங்கல், ஹரிப்பாடு, மாவேலிக்கரை, பறவூர் ஆகிய 19 நகராட்சிகளுக்கு இன்று (16ம் தேதி) 100 வயது ஆகிறது. இதில் தற்போது நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்ந்துவிட்டது. குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகியன நகராட்சிகளாக தொடர்கிறது.

Tags : municipalities ,state ,Travancore ,Nagercoil Corporation , Nagercoil Corporation, Travancore State
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு