×

சமூக வலைத்தளங்களுக்கு சவால் விடும் செயலி; பேஸ்புக், வாட்ஸ்அப்க்கு இணையாக `பிக்கிராபி’: 8ம் வகுப்பு மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

ஆண்டிபட்டி: பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சவால் விடும் வகையில், தேனியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் உருவாக்கிய `பிக்கிராபி’ செயலி பயன்பாட்டாளர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தேனி, கர்னல் ஜான்பென்னிகுக் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலமுருகன்(45). மனைவி ஜெயமணி. மகன் மிதுன்கார்த்திக்(13), மகள் கனிஷ்கா(10). இருவரும் தனியார் பள்ளியில் 8 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பஹ்ரைனில் கட்டிடப் பொறியாளராக பணியாற்றிய பாலமுருகன், கடந்த 5ஆண்டுகளுக்கு முன்புதான் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக பள்ளி திறக்கப்படாத சூழ்நிலையில், வீட்டில் இருந்த மிதுன் கார்த்திக் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மாற்றாக ‘பிக்கிராபி’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார். லடாக் எல்லை பிரச்னையால் சீன தயாரிப்பு பொருட்களை தடை செய்த மத்திய அரசு, அந்நாட்டின் டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட செயலிகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்த செயலிகளுக்கு சவால் விடும் வகையில், மாணவர் மிதுன் கார்த்திக் பிக்கிராபி செயலியை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து மிதுன் கார்த்திக் கூறுகையில், ``முழு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த பிக்கிராபி செயலியில், உரியவர்களின் அனுமதி இல்லாமல் பின் தொடர முடியாது. தகவல் திருட்டு, பக்கத்தை முடக்கம் செய்வது உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளும் எழாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டடமாக கருத்து பரிமாற்றம், புகைப்படம் பதிவேற்றுதல், அதனை பகிர்தல், லைக் செய்தல், அதற்கு கருத்து தெரிவித்தல் என முகநூலில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் ‘பிக்கிராபி’ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் எனது செயலியை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்’’ என்றார்.

ஜூம்க்கு மாற்றாக....
மிதுன் கார்த்திக் மேலும் கூறுகையில், ‘‘எனது செயலிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஜூம் செயலிக்கு மாற்றாக விரைவில் வீடியோ அழைப்புக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் வசதிகள் கொண்ட “ஹலோ நண்பா” என்ற செயலியை அறிமுகப்படுத்தப்பட உள்ளேன். இந்த செயலியில் அதிக நபர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஆலோசனையில் ஈடுபடுவது போல செயலியை அறிமுகபடுத்தப்பட உள்ளேன்’’ என்றார். மிதுன் கார்த்திக்கின் தந்தை பாலமுருகன் கூறுகையில், ‘‘குழந்தை பருவத்திலேயே கம்ப்யூட்டர் கற்பதில் ஆர்வமாக இருந்தான். வளர்ந்ததும் இணையதளத்தில் தனது தேடல்களை துவக்கினான். தானாகவே புரோகிராம் செய்து புதிய இணையதளங்களையே உருவாக்கினான். யோகா வெப்சைட்டையும் உருவாக்கியுள்ளான்’’ என்றார்.

Tags : student ,grader ,Picography , Facebook, WhatsApp, Picography ’, Student Stunning Discovery
× RELATED பள்ளியில் நடந்த மருத்துவ...