×

162 அடி உயரத்தில் அசூர தாக்குதல் எல்லைக்குள் நுழைந்த டிரோனை கொத்தி வீழ்த்திய வழுக்கை கழுகு: அமெரிக்காவில் அதிசயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது எல்லைப் பகுதியில் நுழைந்த டிரோன் மீது ‘வழுக்கை கழுகு’ எனப்படும் வெண்தலைக் கழுகு தாக்குதல் நடத்தி வீழ்த்திய சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அமெரிக்காவை சேர்ந்தவர் ஹண்டர் கிங். சுற்றுச்சூழல் ஆய்வாளர். அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. சமீப காலமாக இதன் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கு ஆபத்து ஏற்பட்டு வந்தது. இது பற்றி கடந்த மாதம் 21ம் தேதி ஹண்டர் கிங் ஆய்வு செய்தார். அப்போது, அரசுக்கு சொந்தான டிரோனை பறக்கவிட்டு ஏரியின் கரைகளை ஆய்வு செய்தார்.
வானத்தில் 162 அடி உயரத்தில் டிரோன் பறந்து கொண்டிருந்தது. நிலத்தில் இருந்து அதை ரிமோட் கன்ட்ரோல் மூலமாக ஹண்டர் இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அவருடைய கட்டுப்பாட்டை மீறி டிரோன் இயங்கியது. சிறிது நேரத்தில் அதனுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த டிரோன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி, ஏரியில் விழுந்தது. அதற்கு முன்பாக, அந்த டிரோனில் இருந்து ஹண்டருக்கு 27 எச்சரிக்கை சிக்னல்கள் அனுப்பப்பட்டன. அதை தேடும் பணியில், ஹண்டரும், அவருடைய குழுவினரும் தோல்வி கண்டனர். பின்னர், அப்பகுதியில் நடந்த தேடுதலின்போது, டிரோனை வெண்தலை கழுகு ஒன்று தாக்கியதை பார்த்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். இந்த டிரோன் தாக்கப்பட்ட போது, மணிக்கு 22 மைல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

தனது எல்லைக்குள் புதிதாக பெரிய பறவை நுழைந்து விட்டதாக கருதி, டிரோன் மீது அந்த கழுகு தாக்குதல் நடத்தி இருக்கலாம் அல்லது அதை இரை என கருதி தாக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. டிரோன் கீழே விழுந்த பிறகும், அப்பகுதியில் அந்த கழுகு நீண்ட நேரம் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக, அதை பார்த்த தம்பதியினர் தெரிவித்தனர். டிரோனை கழுகு தாக்கிய சம்பவம், அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய சின்னம்
* வட அமெரிக்கா, அலாஸ்கா போன்ற இடங்களில் வாழ்கிறது.
* வேட்டையாடப் படுவதாலும், மாசு காரணமாகவும் இக்கழுகு இனம் இப்போது அழியும் நிலையில் உள்ளது.
* இது, கடலின் மீது பறந்து வேட்டையாடும் தன்மை கொண்டது.
* மணிக்கு 120 முதல் 160 கிமீ வேகத்தில் பறக்கும்; அதே வேகத்தில் அம்புபோல் கீழ் நோக்கி பாய்ந்து வேட்டையாடும்.
* வெண்தலை கழுகுதான், 1782ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசிய சின்னமாக இருந்து வருகிறது.
* இதன் தலை வெள்ளையாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வழுக்கை போல் தெரியும். அதனால்தான். ‘வழுக்கை கழுகு’ என்றும் பெயர் வந்தது.


Tags : United States , Drone, Bald Eagle, USA
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!