×

74வது சுதந்திர தினம் கொண்டாட்டம் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி: கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பதக்கம்

பார்வையாளர்கள் இல்லாமல் விழா நடந்தது

சென்னை: 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றினார். அப்போது, கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.33 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். பின்னர், தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனீத் சதா, தாம்பரம் விமானப்படை அதிகாரி எஸ்.எம்.மனோகரன், கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரல் பரமேஷ், டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி கே.ஜெயந்த் முரளி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

இதைதொடர்ந்து, திறந்த வாகனத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், கோட்டை கொத்தளத்திற்கு சென்ற முதல்வர் காலை 8.45 மணிக்கு நாட்டுப்பண் இசைக்க, தேசிய கொடி ஏற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார். அதன்படி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் ச.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி, ஆனந்த வள்ளி, முத்தம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கொரோனா பணிக்காக முதலமைச்சரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை உருவாக்கிய கருவூல கணக்கு துறைக்கும், காய்ச்சல் முகாம்களை அமைத்து கொரோனா தொற்று சங்கிலியை உடைத்ததற்காக சென்னை மாநகராட்சிக்கும், புதுமையான உத்திகளை கையாண்டு நுண்ணீர்ப் பாசனத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடம்பெற உதவிய வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர் மற்றும் வேளாண்மை பொறியியல் துறைக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல், கொரோனா தடுப்பு பணியில் தடைகள் இன்றி மருந்துகள் கிடைக்க தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய கணினி மாதிரியை உருவாக்கிய தமிழக காவல் துறையின் இணையவழி குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பான சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் விருது மயிலாப்பூர் சிஎஸ்ஐ காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளிக்கும், சிறந்த மருத்துவர் விருது சேலத்ைதச் சேர்ந்த டாக்டர் சியாமளாவிற்கும் வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது திருச்சியைச் சேர்ந்த சாந்தகுமாருக்கு வழங்கப்பட்டது. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.

மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி. கோதணவள்ளிக்கும், சிறந்த தொண்டு நிறுவன விருது கடலூர் கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த நடனசபாபதிக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சிகளுக்கான முதல் பரிசு விழுப்புரம் நகராட்சிக்கும், 2ம் பரிசு கரூர், 3ம் பரிசு கூத்தநல்லூர் நகராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பேரூராட்சிகள் விருது முதல் பரிசு சேலம் மாவட்டம் வனவாசி, 2ம் பரிசு தேனி மாவட்டம் வீரபாண்டி, 3ம் பரிசு கோவை மாவட்டம் மதுக்கரை பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆண்கள் பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.அருண்குமார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ராம்குமார், சென்னையைச் சேர்ந்த எஸ்.அம்பேத்கர், பெண்கள் பிரிவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மு.புவனேஸ்வரிக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறையின் சித்தா பேராசிரியர் டாக்டர் சாய் சதீஷ் மற்றும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றி வரும் 27 முன்கள பணியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பதக்கங்களை வழங்கினார்.  
 
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் திரளாக திரண்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை கண்டுகளிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை முதலே தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை காண கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் ஒரே இடங்களில் கூட்டமாக கூட அரசு தடை விதித்துள்ளது. இதனால், சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே, பொதுமக்கள் நிகழ்ச்சியை காண நேரடியாக வரவேண்டாம் என அரசு கூறியது. இதனால், நேற்று பார்வையாளர்கள் யாரும் இன்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.



Tags : Palanisamy ,fort ,celebrations ,occasion ,Independence Day ,front line employees ,Corona , 74th Independence Day, Fort, National Flag, Chief Palanisamy, Corona
× RELATED நூற்பு மில்லில் பயங்கர தீ விபத்து