×

தலைமையின் ஒப்புதல் இல்லாமல் அதிமுக பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக எச்சரிக்கை

சென்னை: அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கட்சி பற்றி  கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இபிஎஸ்,   ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக எச்சரித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக  அமைச்சர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது. இதனால் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் 12 பேர் கொண்ட மூத்த அமைச்சர்கள் குழு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை நேற்று தனித்தனியாக 2 முறை சந்தித்து  சமரசம் ஏற்படுத்தினர்.

இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி  பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுகவையும், ஆட்சியையும், எப்படி மாற்றாரும்  பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப்போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற  நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகளில் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய  சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் ஜெயலலிதா காலத்தில்  இருந்ததை போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.  

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், அதிமுக தலைமை விரிவாக ஆலோசித்து,  தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.  எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம்  தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும். அதிமுக தொண்டர்கள் மக்கள்  பணிகளிலும், கட்சி பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கட்சியை வெற்றி சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும்  இன்றியமையாதவை.
 
அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அதிமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, தலைமையின்  ஒப்புதல் இல்லாமல், தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  இதை மீறுவோர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும்.    கருத்து பரிமாற்றங்களை செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை.  எனவே, அதிமுக அரசின் சாதனைகளை  பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். மக்கள் என்றைக்கும்,  எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த அன்பினை நாமும் பெற்றிருக்கிறோம்.இவ்வாறு அவர்கள்  கூறியுள்ளனர்.

Tags : OPS ,AIADMK , AIADMK, EPS, OPS
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...