×

2 நாள் கடைகள் மூடல் எதிரொலி: ஒரே நாளில் 248 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனை: மதுரை மண்டலம் முதலிடம்

சென்னை: சுதந்திர தினம், ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில்  248.01  கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், வாரம்  தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. அதன்படி, மருந்துக்கடைகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட  அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், சனிக்கிழமை தோறும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்தே  காணப்படுகிறது. சனிக்கிழமைகளில் வழக்கமாக 80 கோடி வரையில் மட்டுமே விற்பனை நடைபெறும்.

ஆனால், தற்போது இந்த விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 160 முதல் 180 கோடி  வரையில் விற்பனை நடைபெறுகிறது. இந்தநிலையில், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன்று முழு ஊரடங்கை முன்னிட்டும் இரண்டு  நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால், நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.  குடிமகன்கள் தேவையான மதுபானங்களை அட்டைப்பெட்டிகள், சாக்குப்பைகளில் வாங்கி இருப்பு வைத்தனர். அன்றைய தினம் 80 சதவீத டாஸ்மாக்  கடைகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் வழங்கும் முறையே  பின்பற்றப்பட்டது.

அதன்படி, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 248.01 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலத்தில் 31.50 கோடிக்கும்,  திருச்சி மண்டலத்தில் 55.77 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 54.60 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 49.78 கோடிக்கும், அதிகபட்சமாக மதுரை  மண்டலத்தில் 56.45 கோடிக்கும் மதுவிற்பனையாகியுள்ளது. இரண்டு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையடுத்து மதுவிற்பனை இரண்டு மடங்காக  உயர்ந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Madurai ,region ,Tasmac , Tasmac, Liquor Sales, Madurai Zone
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...