×

உடுமலை சங்கர் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் கடந்த 2016 மார்ச் 13ம் தேதி   உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அவரது மனைவி கவுசல்யா உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு  பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 22ம் தேதி தீர்ப்பு வழங்கியது. உடுமலை சங்கர் கொலை  வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு இதுவரை உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதோடு, மேலும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளுக்கு  ஊக்கமளிப்பதாக அமைந்து விடும்.
 
எனவே, தமிழக அரசு தாமதமில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், உரிய வாதங்களை எடுத்து வைத்து குற்றவாளிகளுக்கு  தண்டனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Udumalai Shankar ,Govt ,convicts ,K. Balakrishnan Udumalai Shankar ,K Balakrishnan , Udumalai Shankar, murder case, convict, Rasu appeal, K. Balakrishnan
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...