இறந்தது இலங்கை தாதா அங்கோட லொக்காதான்: விசாரணையில் காதலி உறுதி

கோவை: கோவையில் இறந்தது அங்கோட லொக்காதான் என  சிபிசிஐடி விசாரணையின்போது  அவரது காதலி தெரிவித்துள்ளார்.

கோவையில் இலங்கை தாதா அங்கோட லொக்கா இறப்பு வழக்கில் அவரது காதலி அமானி தாஞ்சி, வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன்  ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 13ம் தேதி 3 நாட்கள் காவலில் எடுத்தனர். இவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடந்தது.  நேற்று விசாரணை முடிந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அமானி தாஞ்சி சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிவகாமசுந்தரி ேகாவை மத்திய சிறையிலும், தியானேஸ்வரன்  பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுத்து விசாரித்தபோது காதலி அமானி தாஞ்சியிடம் போலீசார் அதிக நேரம் விசாரித்தனர். அப்போது அவர் எந்த சலனமும் இன்றி பதில்  கூறியதாக தெரிகிறது. அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுவதாவது: ‘‘அங்கோட லொக்கா அழைத்ததின்பேரில் கோவைக்கு நான் 3 முறை  கொழும்பில் இருந்து வந்து சென்றேன். கடந்த மார்ச் மாதம் வந்த நான் சில நாட்களில் கொழும்பு செல்ல திட்டமிட்டேன். லாக் டவுன் அறிவிப்பால்  என்னால் செல்ல முடியவில்லை. லொக்காவுடன் அவரது வீட்டில் தங்கி விட்டேன். அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார். ஊரடங்கு  அறிவிக்கப்பட்ட பின்னர் உடற்பயிற்சி கூடம் செல்லவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. திடீரென நெஞ்சு வலிப்பதாக  கூறினார்.

தனியார் மருத்துவமனைக்கு சென்று பின்னர் ேகாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டார். இறந்தது லொக்காதான்.  ஆள் மாறாட்டம் எதுவும் நாங்கள் செய்யவில்லை. அவரை நாங்கள் ெகாலை செய்யவுமில்லை. அவர் இறந்த பின்னரே நான் கர்ப்பமாக இருப்பதை  உறுதி செய்தேன். கர்ப்பத்தை கலைத்துவிட்டு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்தேன். இவ்வாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பிரதீப் சிங் என்பவர்  யார்? அவர் பெயரில் எப்படி ஆதார் கார்டு போலியாக தயார் செய்தீர்கள்?, இலங்கையில் இருந்து லொக்கா எப்படி வந்தார்?, நீங்கள் போலி  ஆவணங்களை தயார் செய்து அழைத்து வந்தீர்களா? என சிவகாமசுந்தரியிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர் சரியான பதில் தரவில்லை என தெரிகிறது. தியானேஸ்வரனிடம் விசாரித்தபோது அவர், ‘‘நான் சிவகாம சுந்தரி உதவி கேட்டதால்  செய்து தந்தேன். அங்கோட லொக்காவின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறேன். எனக்கு வேறு விவரங்கள் எதுவும் தெரியாது’’ என்று கூறியுள்ளார்.

போலீசார் தியானேஸ்வரனை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

லொக்காவின் துப்பாக்கி மாயம்

ேகாவையில் இறந்த அங்கோட லொக்காவின் வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி ஒன்று இருந்தது. அவர் இறந்த சில நாட்கள் கடந்து வீட்டிற்கு  வந்த இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் நபர் ஒருவர், அமானி தாஞ்சியை மிரட்டி அந்த துப்பாக்கியை வாங்கி சென்றதாகவும், துப்பாக்கி விவகாரத்தை  வெளியே சொல்லக்கூடாது என அவர் கூறியதாகவும் தெரிகிறது. துப்பாக்கியை வாங்கி சென்றவர் அங்கோட லொக்காவின் கூட்டாளியாக இருக்கலாம்  என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் யார்? எங்கே இருக்கிறார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>