×

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பேயர்ன் மியூனிக்: பரிதாபமாக வெளியேறியது பார்சிலோனா

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதியில் பார்சிலோனாவை 8-2 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த பேயர்ன்  மியூனிக் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. யுஇஎப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் போர்ச்சுகலின்  லிஸ்பன் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற 3வது காலிறுதியில் ஸ்பெயினின் பார்சிலோனா - ஜெர்மனியின் பேயர்ன்  மியூனிக் அணிகள் மோதின. இந்த 2 அணிகளும் 18வது முறையாக காலிறுதியில் நுழைந்துள்ளன. அதிலும் பார்சிலோனா அணிக்கு தொடர்ந்து 13வது  காலிறுதிப் போட்டியாகும்.

அதனால்  பார்சிலோனா  உற்சாகத்துடன் களம் கண்டது. அதற்கு ஏற்ப பந்து பெரும்பாலும் பார்சிலோனா வீரர்கள் வசம்தான் இருந்தது. ஆனால்,  பந்தை  துல்லியமாகக் கடத்துவதில் பேயர்ன் சிறப்பாக செயல்பட்டது. ஆட்டத்தின் 4வது நிமிடம் அனுபவ வீரர் தாமஸ் முல்லர் முதல் கோலை  அடித்து பேயர்ன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். அடுத்து 7வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் சுவாரெஸ்  கோல் நோக்கி அடித்த பந்தை,  பின்கள ஆட்டக்காரரான  டேவிட் தடுக்க முயன்ற போது சுய கோலாக மாறியதால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.அதன்பிறகு போட்டி வேகம் பிடித்தது.  பேயர்ன் அணியின் இவான் பெரிசிக் 21வது நிமிடத்திலும், செர்ஜ் கினாபி 27வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர்.

31வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இடைவேளையின்போது பேயர்ன் அணி  4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை  வகித்தது. 57வது நிமிடத்தில் பார்சிலோனாவின் சுவாரெஸ் சக வீரர் ஜோர்டி அல்பா தந்த பந்தை கோலாக மாற்றி நம்பிக்கை தந்தார். ஆனால், அதற்கு  பதிலடியாக  பேயர்ன் அணியின் ஜோஸ்வா கிம்மிச் 63வது நிமிடத்திலும், ராபர்ட் லெவண்டவுஸ்கி 82வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். தொடர்ந்து  ஆதிக்கம் செலுத்திய அந்த அணிக்கு, 75வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய பிலிப் கவுடினோ 85வது மற்றும் 89வது நிமிடங்களில் கோல்  அடித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பேயர்ன் மியூனிக் 8-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று, 12வது முறையாக அரையிறுதிக்கு  முன்னேறியது.

முதல் முறையாக...
* யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றில் முதல்முறையாக 8 கோல் அடித்து வென்ற அணியாக பேயர்ன் மியூனிக் வரலாறு படைத்துள்ளது.
* பார்சிலோனா அணி 1951ம் ஆண்டுக்கு பிறகு 6 கோல் வித்தியாசத்தில் தோற்றது இதுவே முதல்முறையாகும்.
* சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 13முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக ரியல் மாட்ரிட் அணி உள்ளது. பேயர்ன் அணி 12வது முறையாக  அரையிறுதிக்கு முன்னேறி 2வது இடத்தில் உள்ளது.
* ஸ்பெயினின் லா லிகா தொடரின் 2020 சீசனில் 2வது இடத்தை பிடித்த பார்சிலானா, சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதியுடன்
வெளியேறியுள்ளது.
* சாம்பியன் லீக் தொடரில் இரு அணிகளும் 8முறை மோதியுள்ளதில் பேயர்ன் மியூனிக் 5 முறை, பார்சிலோனா 3முறை வென்றுள்ளன.

Tags : semi-final ,European Champions League ,Bayern Munich ,exit ,Barcelona , uropean Champions League, semi-final, Barcelona
× RELATED ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பைனலுக்கு முன்னேறியது விதர்பா