×

கடையம் அருகே விதிகளை மீறி லாரிகளில் குளத்து மண் கடத்தல்: நடவடிக்கை பாயுமா?

கடையம்: கடையம் அருகே குளங்களில் இருந்து விதிகளை மீறி லாரிகளில் மண் கடத்தப்படுவது ெதாடர் கதையாகி வருகிறது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்கு குளங்களில் இருந்து மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தென்காசி, அம்பை, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களில் உள்ள குளங்களிலிருந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. இதில் டிராக்டரில் மட்டும்தான் மண் அள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடையம் அருகே பண்டாரகுளத்தில் டிப்பர் மற்றும் ராட்சத லாரிகளில் மண் அள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

அதிகளவு பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் செல்வதால் சாலை விரைவில் சேதமடைந்து விடுகிறது. மேலும் சாலையில் செல்பவர்களின் மீது மண் கட்டியும், தூசியும் பறந்து விபத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களில் டிராக்டர் சிக்காமல் சென்று வரும் என்பதற்காகத்தான் அரசு டிராக்டருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் டிப்பர் மற்றும் ராட்சத லாரிகளில் மண் அள்ளப்பட்டு செங்கள் சூளைகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு விதியை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று பண்டாரகுளத்தில் இருந்து முத்தம்மாள்புரம் சாலையில் ராட்சத லாரியில் மண் அள்ளி வந்தபோது டிராக்டருக்கு வழி கிடைக்காமல் சாலையருகே பள்ளத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே கடையம் பகுதி குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பம்.


Tags : lorries ,Kadayam , Kadayam, lorry, pond soil smuggling
× RELATED கடையம் அருகே சோளத்தட்டையில் பதுங்கிய ராட்சத மலைப்பாம்புகள்