×

சுதந்திரத்தைப் பெற்றுந்தந்த தியாகிகளின் தியாகங்களை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 74-வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை முத்துக்களாக கோர்த்துக் கொடுத்துள்ள அரசியல் சட்டத்தை நமக்கு அளித்துள்ள இந்த சுதந்திரத்தைப் பெற்றுந்தந்த தியாகிகளின் தியாகங்களை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம். சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததும், அவர்களின் அறவழிப்போராட்டமும்; எல்லாத் தலைமுறையினரும் மனதில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருவூலமாகும். பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஆறு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் என்றைக்கும் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த மதிப்புமிக்க- தன்னலமற்ற தேசப்பணியில் - தமிழர்களின் பங்களிப்பு, எண்ணி எண்ணி இன்றும் வியக்கத்தக்கது; போற்றத்தக்கது.“கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதம் ஏந்தாமல் அகிம்சா யுத்தம் நடத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிய அண்ணல் காந்தியடிகள், தமிழ் மண்ணை நேசித்தவர். 14 முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில் தமிழகம் ஒரு களமாகப் பயன்பட்டிருக்கிறது” - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு ஏற்றாற் போல், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்குமான “தியாகிகள் பென்ஷன்” உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து - அவற்றைச் செயல்படுத்தியும் காட்டியவர்.

 ஆகவே இந்தச் சுதந்திர தினத்தில், “சாதி, மத, இன வேறுபாடுகளை” அறவே தூக்கியெறிந்து - “சகோதரத்துவம், சமத்துவம்” என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : MK Stalin ,martyrs ,Independence Day ,greetings ,DMK , Let's count the sacrifices of the martyrs of independence today: DMK leader MK Stalin's Independence Day greetings
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி