×

தமிழகத்தின் நிதி நிலைமை வீழ்ச்சியடைந்து ஐசியூவிற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழகத்தின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து ஐசியூவிற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது” என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 2011-ல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014-ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-20 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையும் மேலும் அதிகமாகி - தமிழகத்தின் நிதி மேலாண்மையில் அதிமுக ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்பது கவலையளிக்கிறது.

 இதுவரை அதிகாரபூர்வமாக அதிமுக அரசு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்க்க ‘’புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’’ போட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டது. இதில் 10 சதவீத புதிய முதலீடுகளாவது வந்ததா? அறவே இல்லை. தமிழகத்திற்குக் கிடைத்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைக் கூட வெளியிட முடியாத,  கையாலாகாத அரசாகவே இன்னும் சில மாதங்களில் இடத்தைக் காலி செய்துவிட்டு, வீட்டுக்குச் செல்லப் போகிறது அ.தி.மு.க. அரசு. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை மே மாதம் அமைத்த அரசு-அந்தக் குழுவிடம் இடைக்கால அறிக்கை கொடுங்கள் என்று கூடக் கேட்கவில்லை. குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அறிக்கை பெறுவது குறித்தும் முதல்வர் கவலைப்படவில்லை.

ஆனால், வழக்கம் போல் “110 விதியின்” கீழ் பகட்டான அறிவிப்பு வருகிறதே தவிர - அர்த்தமுள்ள நடவடிக்கைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவே இல்லை!
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதிகளையும் கேட்டுப் பெறவில்லை. பிப்ரவரி மாதத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி வரிப்பாக்கி மட்டும் மத்திய அரசிடம் 12263 கோடி ரூபாய் இருந்தாலும் - அதையும் அழுத்தம் கொடுத்துப் பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.  மத்திய அரசிடம் அதட்டிக் கேட்பது, தனது பதவிக்கு ஆபத்து என்ற சுயநலத்தின் விளைவாக, தமிழகத்தின் நிதி உரிமையைத் தாரை வார்த்து விட்டார். அ.தி.மு.க. அரசின் மிகமோசமான நிதி மேலாண்மை தோல்வியால், தமிழகம் மேலும் கடனாளி மாநிலமாக அடி ஆழத்திற்குத் தள்ளப்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் 12 சதவீதம்  அதாவது 36311 கோடி ரூபாயை வாங்கிய கடன்களுக்காக மட்டும் வட்டி செலுத்துகிறது அ.தி.மு.க. அரசு. விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் - இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் செலவிட வேண்டிய அரசின் நிதியை, ஒரு பக்கம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் - இன்னொரு பக்கம் ‘கமிஷன்’ அடிப்பதற்கு வாய்ப்புள்ள  திட்டங்களிலும் செலவழித்துக் கொண்டிருக்கிறது.  கொரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு தமிழக நிதி நிலைமை இன்னும் கடுமையாகி -‘ஐ.சி.யூ’-விற்கு எடுத்துப் போகும் சூழல் எழுந்து விட்டது. தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல்வர் பழனிசாமி அடியோடு  புதைத்து விட்டதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

 கொரோனா பேரிடரின் மீளாத் துயரில் ஒவ்வொரு குடும்பமும் மூழ்கியிருப்பதால் - ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 5000 ரூபாய் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து-அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட  முன்வர வேண்டும் என்றும்  மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : MK Stalin ,Tamil Nadu ,ICU , Tamil Nadu, Financial Situation, ICU, MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...