×

கோழிக்கோடு விமான விபத்தை ஆய்வு செய்த மலப்புரம் கலெக்டர், எஸ்பி உட்பட 25 அதிகாரிகளுக்கு கொரோனா: முதல்வர், 7 அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தை ஆய்வு செய்த மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபால கிருஷ்ணன், எஸ்பி முகமது கரீம் உள்பட 25க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு  கொரோனா உறுதியாகி இருக்கிறது.  கடந்த 7ம் தேதி  கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா  விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள்  உயிரிழந்தனர்.   விபத்து நடந்ததும் மலப்புரம்  மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்பி அப்துல் கரீம், ஏஎஸ்பி ஹேமலதா, சப்  கலெக்டர் அஞ்சு மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.  

இந்நிலையில், விபத்தில் பலியான பயணிக்கு கொரோனா உறுதியானதால், மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள், கலெக்டர், உதவி  கலெக்டர், எஸ்பி, ஏஎஸ்பி  உள்பட அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இவர்களும் தனிமையில் இருந்தனர். சில தினங்களுக்கு முன் இவர்கள் அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கலெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்பி முகமது  கரீம், சப் கலெக்டர் அஞ்சு, ஏஎஸ்பி ஹேமலதா மற்றும் கலெக்டர் அலுவலகத்தை  சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கும் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், கேரள முதல்வர்  பினராய் விஜயன், சபாநாயகர் ராமகிருஷ்ணன், மத்திய விமான போக்குவரத்து  அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கேரள அமைச்சர்கள் ஷைலஜலா, மொய்தீன், ஜலீல்,சந்திரசேகரன்,சுனில்குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன்,ஜெயராஜன்,தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா ஆகியோரும் சென்றனர். இவர்களுடன் கலெக்டர், எஸ் பி  ஆகியோரும் இருந்தனர். இதனால், பினராய் உட்பட அமைச்சர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவகள் கூறினர்.

இதன்படி, முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள் 7 பேரும், தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா ஆகியோர் நேற்று தனிமைப்படுத்தி கொண்டனர். விமான விபத்து  நடந்த இடத்திற்கு கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவும் சென்றிருந்ததால் அவரும்  தனிமையில் சென்றுள்ளார்.

Tags : ministers ,Chief Minister ,plane crash ,Kozhikode ,Corona ,SP ,Malappuram Collector , Kozhikode plane crash. Malappuram Collector, SP, Corona, Chief Minister, 7 Ministers
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு