சேலம்: சேலத்தில் பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பெங்களூரில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து செவ்வாய்பேட்டை பகுதியில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில் தலைமையிலான போலீசார் மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் சிக்கியது. இந்நிலையில், சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிறு சிறு மூட்டைகள் கிடந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது, அவை அனைத்தும் ஹான்ஸ், பான்பராக் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் செந்தில், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் நெருக்கடிக்கு பயந்து சேலத்தில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை வீசினார்களா? அல்லது பெங்களூரில் இருந்து கடத்தி வந்தபோது போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் வீசினார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.