நடிகர் மரணத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளவில்லை : தேசியவாத காங். தலைவர் சரத்பவார் தடாலடி

மும்பை:நடிகர் மரணத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் விவசாயிகளின் தற்கொலையை கண்டுகொள்ளவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.  முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், சுஷாந்தின் சகோதரிகள், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் சில திரை பிரபலங்கள் என மொத்தம் 56 பேரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இதற்கிடையே சுஷாந்தின் காதலி ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகார் மாநில காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ‘நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால் அதுபற்றி அதிகம் விவாதிக்கப்பட தேவையில்லை. அது அவ்வளவு பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. விவசாயிகள் சுமார் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடிகர் மரணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா போலீசாரை 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. போலீசார் மீது மற்றவர்கள் குற்றம் சாட்டியதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சுஷாந்த் சிங்கின் வழக்கை சிபிஐ விசாரிக்க நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன்’ என்றார்.

Related Stories:

>