சத்தியமூர்த்தி பவனில் நாளை 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாளை 74வது சுதந்திர தினத்தையும், சுதந்திரத்தை பெற்று தந்த காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவையும் இணைத்துக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் தேசிய கொடியை 10 மணிக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. மேலும், காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசப்பிதாவிற்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றுகிற நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநில தலைவர் குமரி அனந்தன் தலைமை வகிக்கிறார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கிற வகையில் சர்வதேச தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 150 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்தில் எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இவ்வளவு பெரிய கொடி அமைத்ததில்லை என்கிற கின்னஸ் சாதனையை இது படைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரசின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றுகிற வகையில் 150 அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கவிருக்கிறது. எனவே, நாளை காலை சுதந்திர தின விழாவில் காங்கிரசார் பங்கேற்க இருக்கிறார்கள்.

Related Stories: