×

10ம் வகுப்பு தேர்வு குளறுபடிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்களே காரணம்; தேர்வுத்துறை குற்றச்சாட்டு

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் குளறுபடி நடக்க, தலைமை ஆசிரியர்கள் தான் காரணம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளி தேர்வு மையம் மாறக் கூடாது என்பதற்காக வேண்டும் என்றே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 27ம் தேதி நடக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் பருவத் தேர்வு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பட்டியலில் 5177 மாணவர்களின் விவரங்கள் இல்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் மாதம் தேர்வுத்துறை அறிவித்த அறிக்கையில் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான நாளில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கை 9 லட்சத்து 39 ஆயிரம் அளவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு எண்ணிக்கைக்கு இடையே வித்தியாசம் வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் தான் காரணம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் போது அந்தந்த பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் தேர்வு எழுவதாக காட்ட வேண்டும் என்பதற்காக, தலைமை ஆசிரியர்கள் கூடுதலாக சில மாணவர்கள் பெயர்களை சேர்த்து பட்டியல் தயாரித்துவிட்டு பின்னர் அவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தெரிவித்து விட்டார்கள். அதனால் தான் குழப்பம் ஏற்பட்டது என்று தேர்வுத்துறை தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால், கூடுதலாக மாணவர்கள் பெயர்களை சேர்த்து பட்டியல் தயாரித்த தலைமை ஆசிரியர்கள் யார் என்ற விசாரணையை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. இதையடுத்து பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.


Tags : School principals , 10th grade, exam mess, school head teacher, reason, exam department charge
× RELATED ₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா...