×

தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை ஒரே நாளில் 40 போலீசார் பிளாஸ்மா தானம்

சென்னை: தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்த நிலையில் 70 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் நேற்று ஒரே நேரத்தில் 40 போலீசார் பிளாஸ்மா தானம் வழங்கியதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இதுவரை 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் செய்திருப்பது பாராட்டுக்குறியது. காவலர்கள் மழை, வெயில் என்று பாராமல் பணியாற்றுவது மட்டும் அல்ல பொதுமக்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள். காவல் துறையினரை பின்பற்றி பொது மக்களும் பிளாஸ்மா தானம் கொடுக்க முன் வரவேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

ஒருவர் கொடுக்கும் 500 மில்லி பிளாஸ்மா இரண்டு உயிர்களை காப்பாற்ற உதவும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். ஒருவர் எப்படி தொடர்ந்து இரத்த தானம் கொடுக்கிறாரோ அதை போல பிளாஸ்மா தானமும் 14 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து கொடுக்கலாம். இதுவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா மூலம் 70 பேர் குணமடைந்து உள்ளனர். 76 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். அதை 152 பேருக்கு கொடுக்கலாம். தற்போது 89 பேருக்கு தான் பிளாஸ்மா சிகிச்சை கொடுத்து இருக்கிறோம். எந்த நோயாளிக்கு எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பார்த்துக் கொடுக்கிறார்கள். தற்போது தேவையான பிளாஸ்மா இருக்கிறது. கொரோனா நோய் தொற்று காலத்தில் இரத்த தானத்தை விட பிளாஸ்மா தானம் முக்கிய தேவையாக இருக்கிறது.

சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அது போக 6 மருத்துவக் கல்லூரிகளில் அதற்கு உண்டான எக்யூப்மென்ட் தயார் நிலையில் வைத்து பிளாஸ்மா தானம் செய்யக் கூடிய வழிமுறைகளை செய்து இருக்கிறோம். இந்தியாவில் தமிழகத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 88 சதவீத பேரும், தமிழகம் முழுவதும் 81 சதவீத பேரும் குணமடைந்து இருக்கிறார்கள். கொரோனா அறிகுறி தெரிந்தவுடனே தாமதிக்காமல் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு நாள் காய்ச்சல் தான் என்று அலட்சியப்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா நோய் தொற்று காலத்தில் இரத்த தானத்தை விட பிளாஸ்மா தானம் முக்கிய தேவையாக இருக்கிறது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 89 people, plasma treatment, 40 police in one day, plasma donation
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து