×

கேரளா, கர்நாடகாவில் கனமழை கேஆர்எஸ், கபினி உள்பட 4 அணைகளும் நிரம்பின

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் உள்பட 4 அணைகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. கேரள மாநிலம், வயநாட்டில் தொடங்கிய பருவமழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக உயர்ந்தது. 2,284 அடி (கடல் மட்டம்) உயரம் கொண்ட இந்த அணையில் நேற்றைய நிலவரப்படி 2,283.45 அடி தண்ணீர் இருந்தது. கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 124.45 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 18,027 கனஅடியாகவும், வெளியேற்றம் 16,930 கனஅடியாகவும் இருந்தது.
 
குடகு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஹாரங்கி அணை நிரம்பியுள்ளது. 2,859 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 2,858.10 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,733 கனஅடியாகவும், வெளியேற்றம் 2,418 கனஅடியாகவும் இருந்தது. ஹாசன் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஹேமாவதி அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியது. 2,922 அடி உயரம் கொண்ட இந்த அணையில், நேற்றைய நிலவரப்படி 2,921.41 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10,697 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8,190 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள 4 அணைகளும் நிரம்பியதால், கர்நாடகா விவசாயிகள்
பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

* அடுத்த வாரம் சமர்ப்பண பூஜை
கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளும் நிரம்பி விட்டதால், இம்மாநில அரசின் சார்பில் அடுத்த வாரம் முதல்வர் எடியூரப்பா இவற்றில் சமர்ப்பண பூஜை செய்கிறார். நான்கு அணைகளும் நிரம்பியதால், தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீர் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கேஆர்எஸ்சில் அதிசயம்
கடந்தாண்டு இதே ஆகஸ்ட் 13ம் தேதி கேஆர்எஸ் அணை முழுமையாக நிரம்பியது. இந்தாண்டும் அதே நாளில் இந்த அணை நிரம்பியுள்ளது. இது, ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Tags : Kabini ,Kerala ,Karnataka ,KRS , Kerala, Karnataka, heavy rains, KRS, Kabini, 4 dams, flooded
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...