×

சுற்றுச்சூழல் பாதிப்பு வரைவு அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும்: சோனியா, ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு -2020ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,’ என மத்திய அரசை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வலியுறுத்தி உள்ளனர். ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை- 2020’ஐ கடந்த மார்ச்சில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இதை கைவிடும்படி மத்திய அரசை எதிர்க்கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த அறிவிக்கையை திரும்ப பெறும்படி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், இக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று வலியுறுத்தி உள்ளனர். சோனியா காந்தி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், ‘எளிமையாக கூறினால், நாட்டின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை அகற்றுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை -2020’ஐ திரும்ப பெற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சமூக கடமை அரசுக்கு உள்ளது. ஊரடங்கு நடவடிக்கையின்போது, மக்களின் கருத்துகளை கேட்டறியாமல் வெளியிட்டது சட்ட விரோதமானது,’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ராகுல் காந்தியும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த அறிவிக்கையை கைவிட வேண்டும் என டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Rahul ,Sonia , Environmental impact draft notice, withdrawal, Sonia, Rahul, insistence
× RELATED தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு