×

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கோபால் தாசுக்கு கொரோனா

* உத்தர பிரதேசத்தில் திடீர் பரபரப்பு
* தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

புதுடெல்லி: அயோத்தியில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் மேடையில் பங்கேற்ற, ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் உரையாற்றினார். இந்த பூஜையிலும், மேடையில் நடந்த விழாவிலும் மோடியுடன் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவரான, 80 வயதாகும் மகந்த் நிருத்திய கோபால் தாசும் கலந்து கொண்டார்.  

பூமிபூஜை, விழா மேடையில் பிரதமர்  மோடியுடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், கோபால் தாசுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* மாஸ்க் இல்லாமல் தாஸ் வைரலாகும் புகைப்படம்
ராமர் கோயில் பூமி  பூஜையின்போது பிரதமர் மோடியுடன் கோபால் தாஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேடையில் பங்கேற்ற மற்ற 4 பேரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட தாடி வைத்துள்ள கோபால் தாஸ் மட்டுமே முகக்கவசம் கூட அணியாமல் இருந்தார்.

* தனிமைப்படுத்தி கொள்வாரா மோடி?
கோபால் தாசுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தும்படி உபி முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மதுரா மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கி விசாரித்து வருகிறது. இதன்படி, இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அதேபோல், மோடியும் தன்னை தனிமைப்படுத்தி கொள்வார் என தெரிகிறது.

* அதிக நாட்கள் பிரதமர்: மோடிக்கு புதிய பெருமை
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, 1947, ஆகஸ்ட் 15 முதல், அவர் மறைந்த 1964, மே 27 வரை 16 ஆண்டுகள், 286 நாட்கள் பிரதமராக இருந்தார். 2வதாக 11 ஆண்டு 59 நாட்கள் இந்திரா காந்தியும், 3வதாக மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் 4 நாட்களும் பிரதமராக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற மோடி, நேற்றுடன் 6 ஆண்டுகள், 79 நாட்களை கடந்து இருக்கிறார். இதன் மூலம், நாட்டில் நீண்ட நாட்களாக பதவி வகிக்கும் 4வது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், நீண்ட நாள் இப்பதவியில் இருக்கும் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற வாஜ்பாயின் சாதனையான 6 ஆண்டுகள், 21 நாட்களையும் மோடி நேற்று கடந்தார்.

Tags : ceremony ,Modi ,leaders ,Corona ,Gopal Das ,Ram Temple , Prime Minister Modi, Chairman, Ram Temple, Foundation Ceremony, Participate, Gopal Dasu, Corona
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா