×

வீட்டில் வைத்து வழிபட அறிவுறுத்தல் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் நலன்கருதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் பல அடி உயர விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். இதை தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு பிறகு இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலமாக அந்த சிலையை எடுத்துச் சென்று கடற்கரை பகுதிகளில் கரைப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் இந்து மத தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய இந்து அமைப்பு தலைவர்கள், வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கம்போல் முக்கிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், தலைமை செயலாளர் சண்முகம், ‘இந்து மத அமைப்பு தலைவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி முடிவை அவர் எடுப்பார்’ என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : idol procession ,home ,Ganesha ,Government of Tamil Nadu ,statue procession , At home, worship instruction, Ganesha statue procession, ban, Government of Tamil Nadu
× RELATED வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை