×

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவிற்கு இதுவரையில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7.5 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகளில் அதிகம் தென்பட்டு வந்த பாதிப்பு, தற்போது வளரும் நாடுகளையும் ஒருவழி செய்து வருகிறது. உதாரணமாக, இந்தியாவில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும பலியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதல் இடத்தில் உள்ளது.  

இதைத் தொடர்ந்து, பலி அதிகமான நாடுகள் பட்டியலில் மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. 4வது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்து வந்தது. இந்நிலையில், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் பலியாகியுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும். இதேபோன்று மொத்த பாதிப்பு ஏறக்குறைய 24 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா தொட்டுள்ள நிலையில், உலகளவில் அதிக பாதிப்புகளை கொண்ட 3வது நாடாகவும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Corona ,India ,England ,Global Corona , Corona, death toll,India, UK
× RELATED எங்கள் அணுகுமுறையில் இருந்து நாங்கள்...