×

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு உள்ளது: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

புதுடெல்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.  மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலைக் காக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஆதலால், கண்டிப்பாக சுற்றுச்சூழல் தாக்க மதி்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிகளை சிதைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், உலக வெப்பமயமாதல், கொரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் பரவலான மக்களின் கருத்துக்களைப் பெற்று தேசிய அளவிலான தி்ட்டத்தை உருவாக்க வேண்டும். கொரோனா வைரஸின் மோசமான விளைவுகள் உலகத்துக்கே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதலால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கைகோர்த்து செயல்பட்டு, அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதியும் மற்றும் கவுரமிக்க வாழ்வாதாரத்தை கிடைக்க வசதி செய்ய வேண்டும். இந்தியாவின் செழுமையான பல்லுயிர் தன்மை மற்றும் பரவலான சமத்துவமின்மைக்கும் கண்டிப்பாக நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும்.

மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை துரத்திச் செல்லும்போது நம்முடைய தேசம் சுற்றுச்சூழலையும், மக்களின் உரிமைகளையும் பெருமளவு தியாகம் செய்துள்ளது. நமது தேச முன்னேற்றத்திற்கு வர்த்தக பரிமாற்றங்கள் நிச்சயமாக தேவை, ஆனால் எப்போதும் மீற முடியாத எல்லைகள் இருக்க வேண்டும், கடந்த ஆறு ஆண்டுகளில் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை மத்திய அரசு அழித்துவிட்டது. இந்த பெருந்தொற்று நோய் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிர்வாக முறையை பிரதிபலிக்கவும் மறு ஆய்வு செய்யவும் வைத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, மத்திய அரசு ஊரடங்கு நேரத்தில் எந்தவிதமான பொதுமக்களுடன் கலந்தாய்வும் செய்யாமல், பலதிட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை, சூழலை மாசுபடுத்துபவர்களுக்கும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் திட்டத்தை முடித்தபின் நற்சான்று அளிக்கிறது. நமது சுற்றுச்சூழலை எப்போதும் இல்லாத அளவு அழிக்கிறது, என கூறியுள்ளார்.


Tags : Sonia Gandhi ,government ,Congress , Environment, Federal Government, Congress ,sonia Gandhi
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...