×

குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பதை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை: அரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி ரவுடி ஜனா கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் இத்தகைய வலியுறுத்தலை முன்வைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , அரசியல் பின்புலத்தோடு குற்றவாளிகள், ரவுடிகள் என பலர் புதுவையில் உலா வருவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதுபோன்று ரவுடிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது தூர்தஷ்டவசமானது என வேதனை தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது ஆகியவைகளை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகி, அமைச்சராகவும் பதவி ஏற்பது மக்களுக்கு தவறான தகவலை கொண்டு சேர்க்கும் எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை தடுக்க மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி புதுவையில் எத்தனை ரவுடி கும்பல்கள் இருக்கின்றன? அவர்கள் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது? அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?புதுச்சேரியில் ரவுடிகும்பலை ஒழிக்க மகாராஷ்டிரா போல் ஏன் தனிச்சட்டத்தை கொண்டுவரக்கூடாது? குற்றப்பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? கடந்த 10ஆண்டுகளில் எத்தனைபேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் ? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து புதுவை அரசும், அதேபோல அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Chennai High Court ,party ,party leaders , Politics can only be cleansed if party leaders avoid allowing criminals into the party: Chennai High Court opinion !!
× RELATED ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை...