×

தருவைகுளம் அருகே கண்மாய் குடிமராமத்து பணியில் முறைகேடு

குளத்தூர்: தருவைகுளம் அருகே கண்மாய் குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த தருவைகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது அனைந்தமாடன் பச்சேரி கிராமம். இக்கிராமத்தையொட்டி தெற்கு பகுதியில் சுமார் 280 ஹெக்ேடர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு பருவமழைகாலத்தில் இக்கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் நெல், பருத்தி, அவரை போன்றவைகளை பயிர் செய்து வருடத்திற்கு முப்போக விவசாயம் செய்து வந்தனர். காலமாற்றத்தால் பருவமழை குறைந்து கண்மாயில் தண்ணீர் தேங்குவது குறைந்து போனது.
 
தற்போது இக்கிராமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 200ஏக்கர் விவசாய நிலங்களில் கத்தரிக்காய், தக்காளி, உளுந்து, மிளகாய் போன்றவைகளை பருவமழைகாலத்தில் மட்டும் பயிர் செய்து  வருகின்றனர். மேலும்  வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க கண்மாயை முழுமையாக பராமரிக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கண்மாய்கரை பலப்படுத்துதல், நீர்வரத்து ஓடைகள், மடைகள், மதகுகளை சீரமைக்க ரூ.79 லட்சத்தில் மராமத்து பணிக்கு கடந்த 2019ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் மராமத்து பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இக்கண்மாய் சுமார் 280ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. பருவமழைகாலங்களில் பெய்யும் மழைநீர் சிந்தலக்கரையிலிருந்து குறுக்குச்சாலை, அரசடி வழியாக நீர்வரத்து கால்வாய் மூலம் வரும் தண்ணீர் இக்கண்மாயில் தேங்கும். பலவருடங்களுக்கு முன்பு இக்கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டு பருவமழைகாலம் தவிர்த்து கோடைகாலங்களிலும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நாளடைவில் இக்கண்மாயை தூர்வாராமல் கிடப்பில் போடப்பட்டதால் கண்மாய் மடைகள் தூர்ந்து போய் மதகுகளும் சிதிலமடைந்து தண்ணீர் தேங்காமல் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயமும் குறைந்து போனது.

இக்கண்மாயை தூர்வாரி மராமத்து பணிகள் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்ததின் பேரில் கடந்த வருடம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக சுமார் ரூ.79லட்சத்தில் கண்மாய்கரைகள் பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்களை தூர்வருதல், மடைகள் பராமரிப்பு மற்றும் மதகினை பழுதுபார்த்தல் பணிகளுக்கு டெண்டர் விட்டது. ஆனால் இப்பணிகளில் எதுவும் இதுவரை முழுமையாக அமைக்காமல் அரைகுறையாக விடப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு இக்கிராமத்தின் நீர்வள ஆதாரமான இக்கண்மாய் மராமத்து பணிகளை முழுமையாக செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Tags : Daruvaikulam ,Kanmai , Daruvaikulam, Kanmai civil work, abuse
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு