×

`யார் தல’ என்ற போட்டியில் ரவுடியை தீர்த்துக் கட்டினோம்: கைதான மற்றொரு ரவுடி வாக்குமூலம்

ஆலந்தூர்: நங்கநல்லூரில் கழுத்தறுத்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். `யார் தல’ என்ற போட்டியில் கொலை செய்ததாக மற்றொரு ரவுடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நங்கநல்லூர் பக்தவச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இவர் மீது பூந்தமல்லி மற்றும் நங்கநல்லூர் பகுதியில் கொலை மற்றும் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் அப்பகுதியில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனிடம் கடைசியாக செல்போனில் பேசிய நபரின் எண்ணை கொண்டு விசாரணை செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ராஜா (21) இக்கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பழவந்தாங்கல் ரத்தினபுரத்தில் பதுங்கியிருந்த ராபின் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நங்கநல்லூர் பகுதியில் “யார் தல என்பதில் எங்களுக்குள் போட்டி இருந்தது. இதனால் அவனை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். இதற்காக எனது தம்பி மற்றும் பல்லாவரத்தை சேர்ந்த எங்களது உறவினர் மூன்று பேர் உட்பட எட்டு பேர் சேர்ந்து பிரபாகரனை மது அருந்த அழைத்து சென்று மைதானத்தில் அவனுக்கு போதை தலைக்கேறியதும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றேன்” என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து, ராபின் ராஜா கொடுத்த தகவலின்பேரில் அவரது சகோதரர் ஒளிவராஜ் (20) உறவினர்கள் பல்லாவரத்தை சேர்ந்த ஆகாஷ் (20), பிரபு (21), அருண் (20) நங்கநல்லூர் ரகுபதி நகரை சேர்ந்த ராஜ்குமார் (21), பார்த்திபன் (22) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செல்லபாண்டியை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Rowdy ,contest , `Who's head ', match, rowdy, arrested rowdy, confession
× RELATED புளியந்தோப்பில் பழிக்குப்பழி வாங்க...