இலங்கை தாதா அங்கோட லொக்கா இறப்பில் மர்மம் காதலி உள்பட 3 பேரிடம் 3 நாள் காவலில் விசாரணை: கோவை நீதிமன்றம் அனுமதி

கோவை: கோவையில் இலங்கை தாதா இறப்பு வழக்கில் கைதான 3 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதித்தது. கோவை சேரன் மாநகரில் கடந்த மாதம் 4ம் தேதி இலங்கையை சேர்ந்த தாதா, போதை மருந்து கடத்தல்காரர் அங்கோட லொக்கா (35) மர்மமாக இறந்தார். இதுதொடர்பாக அவரின் காதலி அமானி தாஞ்சி (27), வழக்கறிஞர் சிவகாமசுந்தரி (36), தியானேஸ்வரன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லொக்காவின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இதற்காக அமானி தாஞ்சி உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரிக்கவேண்டியுள்ளது என்றும், போலி  ஆவணங்கள் பயன்படுத்தியது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றது குறித்தும், தியானேஸ்வரன் வீட்டில் பதுக்கப்பட்ட 1.40 லட்ச ரூபாய் குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்து 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என கேட்டனர். ஆனால் 3 பேரையும் 3 நாட்கள் வரை காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்தது. வரும் 15ம் தேதி மதியம் 2 மணி வரை அவர்களிடம் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணையை தொடங்கினர்.

* பெற்றோர் ரத்த மாதிரியில் டி.என்.ஏ. டெஸ்ட்

இறந்தது லொக்காதானா? என உறுதி செய்ய டி.என்.ஏ. சோதனையால் மட்டுமே முடியும். இல்லாவிட்டால் இந்த வழக்கின் விசாரணை முற்றிலும் மாறி விடும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர். இலங்கை தூதரகம் மூலமாக தந்தை முதுமகே, தாய் சந்திரிகாவின் ரத்த மாதிரி பெற திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>