×

இ-சேவை மையத்தை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம்: அரசின் கொரோனா நிதியுதவி பெற விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள், அந்தந்த நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ சேவை மையங்களில், பதிவு செய்ய வேண்டும். பின்னர், பதிவு அட்டையுடன், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை ஆகியவற்றை இ-சேவை மையங்களில் பதிவு செய்து, கொரோனா நிவாரண நிதி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், அமைப்புசாரா தொழிலாளர்கள், தங்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பதை உறுதி செய்வதற்காக, பதிவு செய்ய வந்தனர். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள், தனியார் கம்ப்யூட்டர் சென்டரில், பதிவு செய்யும்படி கூறியுள்ளனர்.

அதன்படி அவர்கள், தங்களது ஆதார் உள்பட பல்வேறு சான்றிதழ்களை பதிவு செய்துவிட்டு வந்தனர். ஆனால், இ சேவை மைய ஊழியர்கள், அவர்களது பெயர்களை பதிவு செய்யாமல், காலம் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இ -சேவை மையத்துக்கு நேற்று மீண்டும் வந்தனர். பின்னர், அலுவலகத்தின் எதிரே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பாஜ தேசிய தொழிலாளர் ஒருங்கிணைப்பு மாநில பொது செயலாளர் வெங்கடேசன் தலைமையில், 5 பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் பாஜ கொடியுடன் கலந்து கொண்டனர். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சமரச ம் பேசினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : road blockade , E-Service Center, condemnation, unorganized workers, road blockade
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் சாலை மறியல் போராட்டம்