×

செயல்திறனுக்கு ஆதாரங்கள் இல்லை ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்திய விஞ்ஞானிகள் சந்தேகம்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஏற்க மறுப்பு

புதுடெல்லி: ரஷ்யா அறிவித்த உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்க மறுத்துள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி தயாராகி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் அறிவித்தார். அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஸ்பூட்னிக் வி’ மருந்தை தனது மகளுக்கு செலுத்தி நல்ல பலன் கிடைத்ததாகவும், அக்டோபரில் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்றும் புடின் அறிவித்தார். ஆனால், ரஷ்யாவின் மருந்து மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

இந்திய நோய் எதிர்ப்பு நிபுணர் வினீதா பால் கூறுகையில், ‘‘ரஷ்ய மருந்தின் மீது சந்தேகங்கள் பல உள்ளன. தடுப்பூசியின் செயல்திறன், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டது, ஆய்வக முதற்கட்ட பரிசோதனைகளின் முடிவென்ன என்பதைப் பற்றியெல்லாம் வெளிப்படையான புள்ளிவிவரங்கள் இல்லை. அப்படியிருக்கையில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட்டுக்குள் வெற்றிகரமாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டன என்பதை நம்புவது கடினம்’’ என்றார். அமெரிக்காவை சேர்ந்த மவுன்ட் சினாய் இகான் ஸ்கூல் ஆப் மெடிசின் பேராசிரியர் புளோரியன் கிராமர் கூறுகையில், ‘‘3ம் கட்ட பரிசோதனை நடத்தப்படாத தடுப்பூசியை நிச்சயம் நான் எடுக்க மாட்டேன். இது பாதுகாப்பானதா, செயல்திறன் மிக்கதா என யாருக்கும் தெரியாது’’ என்றார்.

கொல்கத்தாவின் சிஎஸ்ஐஆர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் பயாலஜியின் மூத்த விஞ்ஞானி உபாசனா ராய் கூறுகைியல், ‘‘2ம் கட்ட பரிசோதனையில் ஒருசில நூறு பேரில் செய்யப்படுவது. ஆனால் 3ம் கட்டம் என்பது அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, தொற்று சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யப்படுவது. 2ம் கட்டம் முடிப்பது சாத்தியம். ஆனால் 3ம் கட்டம் அப்படியல்ல”என்றார். ரஷ்யாவின் மருந்து இன்னும் 3ம் கட்டத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. பல ஆய்வுகளில் 3ம் கட்டம் தோல்வியில் முடிந்த வரலாறுகள் நிறைய உள்ளன. ஜூன் 18ம் தேதி பரிசோதனையை தொடங்கிய ரஷ்யா ஆகஸ்ட் மாதம் முடியக்கூட இல்லை, அதற்குள் எப்படி அனைத்து சோதனையை வெற்றிகரமாக முடிக்க முடியும் என இன்னும் பல நாடுகளின் விஞ்ஞானிகள் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். ஒட்டு மொத்தத்தில் ரஷ்யாவின் மருந்தை ஏற்க பெரும்பாலான உலக நாடுகள் தயாராக இல்லை என்ற நிலையே தற்போது நீடிக்கிறது.

* 2 வாரத்தில் தயார்
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முஷராஸ்கோ நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை பெரிய அளவில் தயாரிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் 2 வாரத்தில் மருந்துகள் தயாராகி விடும். அவை மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தரப்படும். 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் குறைந்தபட்சம் 2 ஆண்டுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும்’’ என்றார்.

* தடுப்பூசி கொள்முதல் நிபுணர் குழு ஆலோசனை
கொரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான தேசிய நிபுணர் குழு முதல் முறையாக நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தடுப்பு மருந்து கொள்முதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தடுப்பு மருந்து விநியோக முறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : scientists ,Russia ,Indian ,Countries ,United States , For efficacy, there is no evidence, Russia, corona vaccine, Indian scientists, doubt
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு