×

மூணாறு அருகே நிலச்சரிவு பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய 3 பேரின் உடல் நேற்று கிடைத்த நிலையில், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 52 பேர் சடலமாக நேற்று முன்தினம்  வரை மீட்கப்பட்டு இருந்தனர். 6வது நாளாக நேற்றும் மீட்புப்பணி நடந்தது. இதில் கண்ணன்- சீதாலட்சுமி தம்பதியின் மகள் நதியா (12), பாரதிராஜா மகள் லக்‌ஷ்மண ஸ்ரீ (10) மற்றும் ஒரு பெண்ணின் அடையாளம் தெரியாத அழுகிய சடலம் என 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக  உயர்ந்துள்ளது. இன்னும் 7 குழந்தைகள் உட்பட 16 பேர் மண்ணில் புதைந்து இருப்பாதக கருதப்படுகிறது. இதனால், இன்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.

* மறுவாழ்வு திட்டம்
கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்தது. இதில், நிலச்சரிவில் சிக்கியவர்களின் உறவினர்களின் மறு வாழ்விற்கு தேவையான திட்டங்களை விரைந்து செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, பலியானவர்களின் உறவினர்களுக்கு வீடு, அரசு வேலை மற்றும் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : landslides ,Munnar , Three, landslide, death toll rises to 55
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...