×

பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்பு துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: நீதி விசாரணை நடத்த எடியூரப்பா முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் பேஸ்புக்கில் தவறான கருத்து பதிவு செய்ததை கண்டித்து கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தி வீடு, தேவர் ஜூவனஹள்ளி மற்றும் காடு கொண்டனஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகினர். பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர், பேஸ்புக் பக்கத்தில் அவதூறான தகவல் ஒன்றை வெளியிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், நேற்று முன்தினம் இரவு அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தீ வைத்தது. காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், அப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது.

கலவரம் குறித்து தகவல் கிடைத்ததும் தேவர் ஜீவனஹள்ளி போலீசார் வந்து, கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அதை கண்டு கொள்ளாத கலவரக்காரர்கள் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை உடைத்தும், தீ வைத்து எரித்தும் ரகளை செய்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் ஆத்திரமடைந்த கும்பல், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதுடன் உதவி போலீஸ் கமிஷனரின் கார், போலீஸ் ஜீப் ஆகியவற்றை உடைத்து நாசமாக்கினர். போலீஸ் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருந்த போலீஸ் வேன் மீதும் தாக்குதல் நடத்தினர்.

வாகனங்களுக்கு தீ வைப்பு: கலவரத்தில் பல இடங்களில் வாகனங்கள், பொது சொத்துகள் தீ வைத்து எரித்ததால், பார்க்கும் இடமெல்லாமல் தீ பற்றி எரிந்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வாகனங்கள் மட்டுமில்லாமல், சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் நாசப்படுத்தியதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசமாகியதாக தெரியவருகிறது. கலவரம் காரணமாக டி.ஜே.ஹள்ளி பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவியது.

ேபாலீசார் குவிப்பு: கலவரம் கட்டுக்கடங்காமல் போனதை தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். கலவரம் அதிகமாக இருந்ததால், ஆயுதப்படை போலீசாரும் அழைக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த 1,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டும் கலவரம் கட்டுக்கடங்காமல் இருந்தது. டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் மட்டுமில்லாமல் காவல் பைரசந்திரா, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையங்கள் மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். எச்.டி.எப்.சி. வங்கியின் ஏடிஎம் மையத்தையும் சூறையாடினர்.

துப்பாக்கி சூட்டிற்கு மூன்று பேர் பலி: நேற்று முன் தினம் நள்ளிரவு வரை கலவரம் கட்டுக்குள் வராமல் இருந்ததால், வேறு வழியில்லாமல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீசினர். அப்போது காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த வாஜித் (20), ஷாம்புராவை சேர்ந்த யாஷின் பாஷா (22) ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். ஒருவர் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், சிறுபான்மை வகுப்பினர் குறித்து எம்எல்ஏ பெயரில் பேஸ்புக்கில் பதிவிட்டது அகண்ட சீனிவாசமூர்த்தியின் சகோதரி மகன் நவீன் என்பது தெரியவந்ததால், கலவரக்காரர்கள் அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் போலீசார் நவீனை நள்ளிரவில் கைது செய்தனர். மேலும் கலவரத்திற்கு மூலகாரணமாக இருந்த 160 பேரை கைது செய்துள்ளனர்.

* கண்டதும் சுட உத்தரவு
கலவரம் குறித்து விரிவாக அறிக்கை கொடுக்கும்படி உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் எடியூரப்பா, கலவரம் தொடராமல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைரசந்திரா பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால், கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசுக்கு எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார்.

* ஊரடங்கு அமல்
டி.ஜே.ஹள்ளியில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர வெளியில் இருந்து வந்த போலீசாரை உள்ளே நுழைய விடாமல் அப்பகுதியில் தெரு விளக்குகளை அணைத்து விட்டு கலவர கும்பல் அடிதடியில் ஈடுபட்டதால், போலீசாரால் உள்ளே செல்ல முடியாமல் 2 மணி நேரம் தவித்தனர். ஒரு கட்டத்தில் போலீசார் மீதும் கும்பல் தாக்குல் நடத்தியது. இதில் போலீசார் மட்டுமில்லாமல், சில செய்தியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதை தொடர்ந்து உஷாரான போலீசார் கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி சாலையை மூடி விட்டனர். மேலும் கலவரம் பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் இரு போலீஸ் சரகத்தை சுற்றி ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். கலவர பகுதியில் துணை போலீஸ் கமிஷனர்கள் முருகன், ரோஹிணி கட்டோச், சந்தீப் பாட்டீல் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த, முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கலவரப்பகுதி நேற்று முழுவதும் அமைதியாக காணப்பட்டது.

Tags : Bangalore MLA ,Eduyurappa ,house fire ,house ,Bangalore ,trial , Bangalore, Congress MLA's house, arson, shooting, 3 killed, judicial inquiry, Eduyurappa
× RELATED நீர்பாசனத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி...