×

கொரோனாவால் முடங்கியது மீனவர்களின் வாழ்க்கை: வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் அவலம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் 3,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலம் போன்றவற்றால் மீனவர்கள் பல வாரங்களாக கடலுக்கு செல்லவில்லை. கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளுக்கு விமான சேவை இல்லை. ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் மீன்களை சுத்தம் செய்து பதப்படுத்த முடியவில்லை. தற்போது விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றபோதிலும் அவர்கள் பிடித்து வரும் இரால், நண்டு, கணவாய் போன்ற ஏற்றுமதி தரமிக்க மீன் வகைகளை ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்தளவே கொள்முதல் செய்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் மீனவர்கள் சனிக்கிழமைகளில் கடலுக்கு செல்வதில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் வாரத்துக்கு திங்கள் மற்றும் புதன்கிழமை மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். மீனவர்களின் வலைகளில் அதிகபட்சமாக கருவாடு, சங்காயத்துக்கு பயன்படும் சிறியவகை மீன்களே சிக்கின. இரால், கணவாய், நண்டு குறைந்தளவே சிக்கின. கொரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் விசைப்படகு மீனவர்களும் பாதிப்புக்கு தப்பவில்லை. விசைப்படகு மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய இழப்புகளை கொடுத்துள்ளது.

அந்த இழப்புகளை ஈடு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கொரோனா தொற்று துவங்கிய நாளில் இருந்தே விசைப்படகு மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் கிடைக்கும் பகுதிக்கு நாங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு சிறியவகை மீன்களே கிடைக்கிறது. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே கடலுக்கு செல்வதால் பெரியளவில் வருவாய் கிடைக்கவில்லை. இருப்பினும் எங்களின் வாழ்வாதாரம் கருதி கடலுக்கு செல்கிறோம் என்றார்.

Tags : Fishermen , Corona, the life of a fisherman
× RELATED மக்களின் உயிருக்கு உலை வைக்கும்...