×

தற்காலிக காய்கறி சந்தைக்கு கூடாரம், தடுப்புகள் கட்ட பணம் இல்லை: வியாபாரிகள் குமுறல்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தைக்காக கூடாரம், தடுப்புகள் கட்ட பணம் இல்லை என்று வியாபாரிகள் கூறினர். கொரோனா ஊரடங்கு காரணமாக, வடசேரி காய்கறி சந்தை மூடப்பட்டு பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வந்தது. கடந்த ஜூன் மாதம் தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிக சந்தையும் மூடப்பட்டது. 1 மாதம் கடந்து விட்டதால், மீண்டும் தற்காலிக சந்தையை திறக்க வேண்டும். இல்லையென்றால், வடசேரி காய்கறி சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து போதிய இடைவெளிகளுடன், பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தைக்கான கடைகள் அமைக்கப்பட வேண்டும். ஒரே ஒரு நுழைவு வாயில் மூலமே வியாபாரிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். சானிடைசர்  மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் தான் பொதுமக்கள் உள்ளே வர வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் உள்ளே வரக்கூடாது. அதிகாலை வேளையில் லோடுகள் ஏற்றி, இறக்க வேண்டும் என முடிவு  செய்யப்பட்டது. கடைகளின் வரிசை எண்ணின் அடிப்படையில் கடை ஒதுக்கப்படும் என்றும் கூறினர். இது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தைக்கான கடை கட்டும் பணி நடக்கிறது. ஒவ்வொரு வியாபாரியும் அவர்களின் சொந்த செலவில் தான் கூடாரம் அமைக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
இதையடுத்து தற்போது 30 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற வியாபாரிகள்  இன்னும்  கூடாரம் மற்றும் தடுப்புகள் அமைக்க வில்லை. தடுப்புகள் கட்டி இன்று முதல் தற்காலிக சந்தை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பல வியாபாரிகள் தடுப்புகள் கட்ட  வில்லை. இதனால் சந்தை திறப்பு தள்ளி போகிறது. ஏற்கனவே  வருமானத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு, மாநகராட்சியே கூடாரம் அமைத்து தடுப்புகள் கட்டி தர வேண்டும் என வியாபாரிகள் கூறி உள்ளனர்.

ஆனால் இதற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால், மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தற்காலிக கடைகள் கட்டும் பணியை பார்வையிட்டனர். பின்னர் டாக்டர் கிங்சால் கூறுகையில், மாநகராட்சி அறிவித்தபடி வியாபாரிகள் முறையாக தடுப்புகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்த பின், ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்ததும் கடை திறக்கலாம். தடுப்பு அமைத்ததும், உடனடியாக ஆய்வு செய்து அனுமதி கொடுக்கப்படும். எனவே  மாநகராட்சியால் கடைகள் திறப்பதில் எந்தவித தாமதமும் ஆகாது. வியாபாரிகள் தான் வேகமாக தடுப்புகளை கட்டி முடிக்க வேண்டும் என்றார்.


Tags : traders , Temporary vegetable market, tent, barriers
× RELATED ரூ 457.76 கோடி தவறான உள்ளீட்டு வரி 151...