×

தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப்பணிகளில் வட மாநில இளைஞர்கள் அதிகம் பணியமர்த்தப்படுகிறார்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அந்தந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தந்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். .

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத்திய அரசு பணிகளில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் திருச்சி மதுரை சென்னை உட்பட பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங்களில் குறிப்பாக பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங்களிலிருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது என்பது வருத்தத்திற்கு கண்டனத்திற்கும் மறுபரிசீலனைக்கும் உரியதாகும்.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரில் 1500க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் திருச்சியில் தேர்வுசெய்யப்பட்ட 500 பேரில் 450 பேர் பீகார் போன்ற வடமாநிலத்தவர் என்பதும் அதிர்ச்சியையும் கவலையையும் தரக்கூடியதாகும். கரொனா பாதிப்பு எங்கும் நிலவும் நிலையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்க்க இ-பாஸ் வழங்கப்பட்டு திருச்சிக்கு எப்படி வந்தார்கள் என்பது ஆச்சரியத்திற்கும் கேள்விக்கும் உரியதாகும்.

தற்காலிக பணியாளர்கள் சுமார் 2,000 பேர் நிரந்தர வேலை கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் இதுகுறித்து இவர்களின் போராட்டக்குழு தலைவர்களோடு மத்திய அமைச்சர் உட்பட பலரையும் சந்தித்து இது குறித்து பேசினேன். ஆயினும் இவர்கள் யாருக்கும் வாய்ப்பு தராமல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி பணி நியமனம் வழங்கப்படுவதில்லை. ரயில்வேயில் மட்டுமின்றி மத்திய அரசின் பொறுப்பில் உள்ள பல்வேறு துறைகளிலும் இதுபோல் வெளி மாநிலத்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியா ஒரே நாடு தான். பீகாரில், உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு கிடைப்பது போல் தமிழ்நாட்டை சார்ந்த இளைஞர்களுக்கு பீகார் உபி போன்ற மாநிலங்களில் இது போல் அதிக அளவில் வாய்ப்பு கிடைப்பது இல்லையே.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்காலி பணியாளர்கள், தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் வேலைக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில் அந்தந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அந்தந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தந்து அந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் பெரும்பான்மையான பணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் தேவையானால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

நாடாளுமன்றம் கூடும் போது தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை போன்ற துறையின் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இதுகுறித்து வலியுறுத்துவோம். தமிழக அரசின் சார்பில் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வரும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் திருச்சியில் இப்பிரச்சனைக்காக திமுக மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி என்னிடத்தில் விளக்கமாக பேசியதோடு அவர் தலைமையில் போராட்டம் நடத்தியுள்ளார். காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் இவர்களுக்கு என்னுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு”.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,government ,Thirunavukarasar , Government should bring in legislation to give priority to Tamil Nadu youth in government service in Tamil Nadu: Thirunavukarasar urges
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...