×

திருச்சி விமான நிலையத்தில் உடைமைகளில் மறைத்து தங்கம் கடத்திய 4 பேர் கைது!: ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..சுங்கத்துறை நடவடிக்கை..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி விமான நிலையம் என்பது தங்கக்கடத்தலுக்கு நுழைவு வாயிலாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்றே கூறலாம். கொரோனா ஊரடங்கின் காரணமாக விமான  போக்குவரத்து நிறுத்தப்பட்ட சமயத்தில் தான் இங்கு தங்கக்கடத்தல் நடைபெறவில்லை என்று சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையை மேற்கொண்டார்கள். அப்போது சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர், ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தை சேர்ந்த நூர் மற்றும் மானாமதுரையை சேர்ந்த உதயன் ஆகியோர் தங்கக்கட்டிகள், தங்கநகைகளை தங்களுடைய உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, தங்கக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து தங்கக்கட்டிகள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 1 கிலோ 773 கிராம் எனவும், இதன் மதிப்பு 1 கோடியே 23 ஆயிரம் ரூபாய் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Trichy airport ,airport , smuggling gold, Trichy airport
× RELATED ஆசிரியர் வீட்டில் 17 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள் திருட்டு