இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் அவரது காதலி உள்பட 3 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் அவரது காதலி உள்ளிட்ட 3 பேரை கோவை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். கோவையில் உயிரிழந்ததாக நம்பப்படும் இலங்கை நிழல் உலக தாதாவான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரண வழக்கு தொடர்பாக கைதான அவரின் காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய மூவரும் தற்போது கோவை நீதிமன்றத்திக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 7ம் தேதி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதற்காகத்தான் தற்போது மூவரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறவுள்ளது. நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் விசாரணை நடைபெறும்.

அதன் பிறகு மனு மீதான விவரங்கள் தெரியவரும். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் முதல்கட்டமாக உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா? இறந்தது லொக்கா தான் என்றால் எப்படி இறந்தார் என விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மூவரும் கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, இவர்கள் மூவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இறந்தது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதால் லொக்கா மரண வழக்கில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>