×

மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு : கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மதுரை:கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிசாமி உள்பட 3 பேரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரியது தொடர்பான இரு வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோரை மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி கடந்த 29.3.2016ல் விடுதலை செய்தார்.

மேலும் அவரது உத்தரவில், அப்போதைய மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அப்போதைய கலெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் இரு அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை தற்போது நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி புகழேந்தி தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில், பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இந்த வழக்கில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மாதத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2 மாதத்தில் முடிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : PR Palanisamy ,Revocation Canceled: High Court , Madurai, Melur, Granite Quarry, Abuse, Case, Owner, PR Palanisamy, Release, Cancellation, High Court, Judgment
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை