×

கஞ்சா, மது போதை தகராறில் ரவுடி உள்பட 2 பேர் படுகொலை: முடிச்சூர், நங்கநல்லூரில் பயங்கரம்

சென்னை: கஞ்சா, மது போதை தகராறில் ரவுடி உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முடிச்சூர், நங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி (எ) லாரன்ஸ் (35), பெயின்டர். இவரது நண்பர் சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (37). இருவரும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உடையவர்கள். நேற்று முன்தினம் இரவு முடிச்சூர் வந்த ராஜேஷ், நண்பர் ரவியை சந்தித்து கஞ்சா கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ராஜேஷை ரவி சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வீட்டுக்கு சென்ற ராஜேஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து ரவியை வெட்டியுள்ளார். அவரிடம் இருந்த தப்பிக்க ரவி ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆனாலும் ஓடஓட விரட்டி வெட்டியதில் பலத்த காயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலந்தூர்: நங்கநல்லூர் நேரு நெடுஞ்சாலை அருகில் உள்ள கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான காலி மைதானத்தில் நேற்று காலை கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பரங்கிமலை உதவி ஆணையர் ஜீவரத்தினம், பழவந்தாங்கல், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் சடலைத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், நங்கநல்லூர் பக்தவச்சலம் நகர் முதல் தெருவை சேர்ந்த ரவுடி பிரபாகரன் (27) என்பதும், இவர் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இவர், நேற்று முன்தினம் இரவு கன்டோன்மென்ட் மைதானத்தில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : persons ,Terror ,Mudichur ,Nanganallur ,Rowdy , Cannabis, Alcohol, Rowdy, 2 people, Murder, Mudichur, Nanganallur, Terror
× RELATED 47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை