செய்யாறு அருகே அத்தி கிராமத்தில் முருகன் கோயில் மலையை குவாரிக்கு டெண்டர் விட எதிர்ப்பு: மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா, அத்தி கிராமத்தில் மலையில் பழமைவாய்ந்த முருகன் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு இம்மலையை அரசு புறம்போக்கு நிலம் என்று வருவாய்த்துறை சான்றிதழில் குறிப்பிட்டு சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு குவாரிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையறிந்த கிராம பொதுமக்கள் டெண்டரை ரத்து செய்யக்கோரி கடந்த மாதம் 28ம் தேதி ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடிக்கிருத்திகையையொட்டி மலையில் உள்ள முருகன் கோயிலை சுத்தம் செய்வதற்காக 20க்கும் மேற்பட்ட பெண்கள் சென்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அவதூறாக பேசினார்களாம். இதையடுத்து பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தி கிராம முருகன் கோயில் மலை அடிவாரத்தில் திரண்டனர். அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செய்யாறு தாசில்தார் மூர்த்தி மற்றும் போலீசார் வந்து, குவாரி டெண்டரை ரத்துசெய்வது குறித்தும், அவதூறாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு அளித்தால், மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: