பத்திரிகை ஆசிரியர் கைது கண்டித்து புதுமை நாளிதழை வாங்கி குவித்த ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: பத்திரிகை ஆசிரியரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹாங்காங் மக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து செய்தித்தாள்களை வாங்கினர். ஹாங்காங்கில் ‘நெக்ஸ்ட் டிஜிட்டல்’ என்ற நிறுவனத்தின் கீழ், ‘ஆப்பிள் டெய்லி’ என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வருகிறார் ஜிம்மி லாய். ஹாங்காங் நிர்வாகத்தில் சீனா தலையிட்டு அத்துமீறுவதாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். கடந்த மே மாதத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும், சீனாவின் ஆதிக்கத்தால் ஹாங்காங்கின் ஜனநாயகம் பறிபோவதாக சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதினார். இது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முன் தினம் ஜிம்மி லாய் திடீரென கைது செய்யப்பட்டார். அந்நிய நாட்டினருடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுவது, அரசின் மீது அவதூறு பரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 72 வயதாகும் ஜிம்மி லாயும், அவரது சகாக்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜிம்மி லாயை கைது செய்து, தீவிரவாதியை போல் இழுத்துச் சென்றது பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஹாங்காங் மக்கள் புதுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள், ஜிம்மி லாயின் ஆப்பிள் டெய்லி நிறுவன பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால், ஆப்பிள் டெய்லின் பங்குகள் விலை 200 சதவிகிதம் திடீரென உயர்ந்தது. இதன் அடுத்த கட்ட ஆச்சரியமாக, நேற்று ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். இதனால், இந்த பத்திரிகையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது. சில இடங்களில் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வாங்கியதாகவும் கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.

Related Stories:

>