ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டிகள் இன்று தொடக்கம்

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின்  கால் இறுதி ஆட்டங்கள் போர்ச்சுகலில் இன்று தொடங்குகிறது. கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டி மீண்டும் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) நடத்தும் இந்தத் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆக.8ம் தேதியுடன் முடிந்தது. நடப்பு சாம்பியனும், இங்லிஷ் பிரிமியர் லீக்கின் சாம்பியனுமான லிவர்பூல், இத்தாலி  சீரி-ஏ லீகின் ஜூவென்டஸ், ஸ்பெயினின் லா லிகா சாம்பியன் ரியல் மாட்ரிட்  ஆகியவை ரவுண்டு-16ல் தோற்று வெளியேறி விட்டன.

அதே நேரத்தில் ஜெர்மினியின் பண்டெஸ்லிகா சாம்பியன் பேயர்ன் மியூனிச், பிரான்சின் லீக்-1 சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ஸ்பெயினின் லா லிகா தொடரில் இருந்து பார்சிலோனா எப்சி உட்பட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முதல் காலிறுதியில் இத்தாலியின் அட்லான்டா, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 2வது காலிறுதியில் பிரான்சின் ஆர்பி லெயிப்சிக், ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் விளையாடும். தொடர்ந்து ஆக.14ம் தேதி நடைபெறும் 3வது காலிறுதியில் ஸ்பயெினின் பார்சிலோனா, ஜெர்மனியின் பேயர்ன் மியூனிச் அணிகளும், ஆக.15ம் தேதி நடைபெறும் கடைசி காலிறுதியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, பிரான்சின் ஒலிம்பிக்யூ லியோன் அணிகள் களம் காண உள்ளன.

Related Stories:

>