×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரிப்பு: இறப்பு விகிதம் 2%க்கும் கீழ் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 2 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதே போல் ஒருநாள் பலி நேற்று முன்தினம் முதல் முறையாக ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று 871 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 45,257 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் ஒருநாள் பலி, பாதிப்பில் இந்தியா உலக அளவில் நம்பர்-1 இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், குணமடைவோர் விகிதம் அதிகரித்தும், இறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தும் வருகிறது. இதுவரை மருந்தே கண்டுபிடிக்காத நிலையிலும் இந்தியாவில் குணமடைவோர் 69.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதே போல, இறப்பு விகிதம் முதல் முறையாக 2 சதவீதத்திற்கும் குறைவாக, 1.99 சதவீதமாகி உள்ளது. அதாவது, 10 லட்சம் பேரில் 31 பேர் மட்டுமே இந்தியாவில் கொரோனாவால் இறக்கின்றனர். இது மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் மிக குறைவாகும். தற்போது இந்தியாவில் 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கிரிக்கெட் வீரர் மனைவி தகராறு
இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டின் கிசான்பாரா சவுக் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரை நிறுத்திய ஹெட் கான்ஸ்டபிள் சோனல் கோசாய், ரிவாபா மாஸ்க் அணியாதது குறித்து கேட்டுள்ளார். இதில், இருவரிடையே நடுரோட்டில் காரசார வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் ரிவாபா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஏன் தகராறு நடந்தது என விசாரிப்பதாக துணை கமிஷனர் மனோஹர்ஷின் கூறி உள்ளார்.

* உலக அளவில் இறப்பு விகிதம்
உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 3.68 சதவீதமாக உள்ளது. இதில், அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட டாப்-10 நாடுகளில் குறைவான இறப்பு விகிதம் கொண்ட 2வது நாடாக இந்தியாவும், முதல் நாடாக ரஷ்யாவும் உள்ளன. பாதிப்பு பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ள நாடுகளின் இறப்பு விகிதம் வருமாறு:

* கோடிக்கு 6 மாதம்; 2 கோடிக்கு 6 வாரம்
கடந்த ஆண்டு டிசம்ப்ரில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து உலகளவில் மொத்த பாதிப்பு 1 கோடியாக 6 மாதம் ஆனது. அதன்பின், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக வெறும் 6 வாரங்களே தேவைப்பட்டுள்ளது. 45 நாளில் 1 கோடியில் இருந்து 2 கோடியாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் 3ல் 2 பங்கு பாதிப்பை கொண்டுள்ளன. இதுவரை உலக அளவில் 7 லட்சத்து 36 ஆயிரத்து 191 பேர் இறந்துள்ளனர். ஆனாலும், இந்த புள்ளி விவரங்களை காட்டிலும் நிஜ பாதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags : India ,Corona , India, Corona, recovery rate, 70 percent, increase
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...