×

வென்டிலேட்டர் விவகாரத்தில் உண்மை என்ன? மாநிலங்களை ஏமாற்றி விட்டதா மத்திய அரசு: அம்பலப்படுத்தியது ஆர்டிஐ

புதுடெல்லி: கொரோனா பாதிப்புகளை சமாளிக்க மாநிலங்களுக்கு போதுமான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்று சொன்னாலும், உண்மையில் மாநிலங்களை தவிக்க விட்டது மத்திய அரசு என்பதை ஆர்டிஐ பதில் அம்பலப்படுத்தி விட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடைசி கட்டமாக பயன்படுவது வென்டிலேட்டர். செயற்கை சுவாசம் அளிக்க வென்டிலேட்டர் உதவி மிக முக்கியம். மற்ற சாதனங்களை வைத்திருந்தாலும் வென்டிலேட்டர் பற்றாக்குறை வந்து விட்டது என்றால், மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆபத்து உள்ளது. ஆனால், மத்திய அரசு போதுமான அளவுக்கு வென்டிலேட்டர் சாதனங்களை அளிக்கும் என்று உறுதி அளித்திருந்தது.

உண்மையில் போதுமான அளவுக்கு கூட இல்லை, பாதி அளவு கூட வென்டிலேட்டர் சில முக்கியமான பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதே உண்மை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆர்டிஐ கேள்விகளுக்கு மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அளித்துள்ள பதில்கள் அதிர்ச்சி தரத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசி வருகிறது. போதுமான மருத்துவ சாதனங்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தது. குறிப்பாக வென்டிலேட்டர் தேவை குறித்து அவ்வப்போது பேசி தமிழ்நாடு உட்பட சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வென்டிலேட்டர் அனுப்பி வைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. கடந்த மாதம் 11 ம் தேதி வரை, 17,968 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைப்பதாக மாநிலங்களுக்கு ஒதுக்கி கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு உட்பட சில முக்கிய மாநிலங்களுக்கு வந்ததோ 9150 வென்டிலேட்டர்கள் தான்.

* ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட வென்டிலேட்டர்களில் 6 சதவீத அளவுக்கே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
* மத்தியப் பிரதேசத்துக்கு 11 சதவீதம், தமிழ்நாட்டுக்கு 17 சதவீதம் அளவு தான் வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
* சிக்கிம், லட்சத்தீவு ஆகிய துணை மாநிலங்களுக்கு ஒரு வென்டிலேட்டர் கூட அனுப்பி வைக்கப்படவில்லை. அங்கு கொரோனா பாதிப்பும் மிகவும் குறைவு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.
* கர்நாடகாவில் 1.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1650 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைப்பதாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.ஆனால், கிடைத்ததோ 630 தான்.
* கேரளாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 480ல் 180 வென்டிலேட்டர்கள் தான் அனுப்பப்பட்டன.
* மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 4.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டன. அங்கு தான் அதிகமாக 1805 வென்டிலேட்டர்கள் அனுப்பப்பட்டன.

ஆர்டிஐ மூலம் மத்திய அரசு அளித்த பதில்களில் மேலும் சில தகவல்கள்: வென்டிலேட்டரகள் தயாரித்து சப்ளை செய்ய அரசு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் தரப்பட்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1513.92 கோடி மதிப்பில் 30,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஆர்டர் ஏப்ரல் 4 ம் தேதியே தரப்பட்டது. மேலும், மத்திய அரசின் கொள்முதல் அமைப்பான எச்எல்எல் ஹெல்த்கேர் நிறுவனம், கூடுதலாக 28,500 வென்டிலேட்டர்கள் ஆர்டர் தந்தது. பாரத் நிறுவனமும் இன்னமும் தயாரித்தபடி தான் உள்ளது. கொரோனா பாதிப்புகளை சமாளிக்க பிரதமரின் ‘பிஎம் கேர்’ அமைப்புக்கு குவிந்த நன்கொடையில் ரூ. 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் ஆர்டர் தர ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரத் நிறுவனம், ஷான்ராய் அக்வா, மாருதி மற்றும் ஆந்திர மாநில அரசின் நிறுவனம் அலைட் மெடிக்கல் ஆகிய 4 நிறுவனங்கள் தான் வென்டிலேட்டர்கள் தயாரித்து தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,RTI ,states , Ventilator affair, what is the truth? , State Cheating, Federal Government, RTI
× RELATED விற்றல் மற்றும் பணமாக்கல் குறித்த...